Published : 29 Jun 2024 04:27 AM
Last Updated : 29 Jun 2024 04:27 AM

88 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத கனமழை: டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து ஒருவர் உயிரிழப்பு

கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதல் டெர்மினலின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது. இதில் நசுங்கிக் கிடக்கும் கார்கள்.

புதுடெல்லி: டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்தகனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலின் மேற்கூரை நேற்று அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கிருந்த கார்கள் நசுங்கிசேதமாயின. இதில் காருக்குள்சிக்கியிருந்தவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 6 பேர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி விமானநிலைய டெர்மினல் ஒன்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு டெல்லி விமான நிலையத்துக்கு வந்து விபத்து நடந்தபகுதியை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

டெல்லியில் கனமழையால் மழைநீர் கால்வாயில் கவிழ்ந்து கிடக்கும் கார்.

கடந்த வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை டெல்லியில்228 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 1936-ம்ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில்இந்தளவுக்கு மழை பெய்துள்ளது.88 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மழை சாதனை அளவாகப் பார்க்கப்படுகிறது.

1936-ம் ஆண்டு் ஜூன் மாதத்தில் 235.5 மில்லிமீட்டர் மழை பெய்ததேஇதுவரை அதிகபட்ச மழை அளவாகஉள்ளது. மழை காரணமாக டெல்லி-என்சிஆர் (டெல்லி-தேசிய தலைநகர மண்டலப் பகுதிகள்) பகுதிகளில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அசோகா சாலை, பெரோஷாசாலை, கன்னாட் பிளேஸ் பகுதிகளைநோக்கிச் செல்லும் சாலைகள் மூடப்பட்டன. இதேபோல் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் பாதிப்பு ஏற்பட்டது.

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்து டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு சந்தித்து ஆறுதல் கூறினார். படங்கள்: பிடிஐ

டெல்லியில் ஜூன் மாதத்தில் வழக்கமாக 80.6 மிமீ மழை பெய்யும். ஆனால் இம்முறை 228 மி.மீ. மழை பெய்துள்ளது. தற்போதைய கனமழை, வெள்ளநீர் தேக்கம் காரணமாக டெல்லி நகரில் போதுமான மழைநீர் வடிகால் அமைப்பு இல்லை என்பதையே சுட்டிக் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் டெல்லி பருவமழையை சந்திக்க தயாராக உள்ளதாக கடந்த 18-ம் தேதி பேட்டி கொடுத்திருந்தார். வெள்ளநீர் வடிகால் தூய்மையாகவும் தயாராக உள்ளதாகவும் இடர்பாடுகளின்றி பருவமழையை எதிர்கொள்ளவிருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளநீர் வடிய வாய்ப்பின்றி டெல்லி நகரம் தத்தளித்து வருகிறது.

இந்த மழையால் டெல்லியில் வழக்கத்தை விட 3.2 டிகிரி குறைந்து 24.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

2 மாதங்களாக நிலவிவந்த கடுமையான வெப்பத்தை தணிப்பதாக மழை இருப்பினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.20 லட்சம் நிவாரணம்: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய டெர்மினல்-1 மேற்கூரை இடிந்து விழுந்ததில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றுமத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்தார்.

மேலும் காயமடைந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேற்கூரை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து டெர்மினல்-1 பகுதியில் இயக்கப்படவிருந்த இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட விமானச் சேவைகளில் சில ரத்து செய்யப்பட்டன.

சசி தரூர் வீட்டுக்குள் வந்த வெள்ள நீர்: கனமழையின் காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூரின் வீட்டுக்குள் வெள்ளநீர் வந்துள்ளது. வெள்ளநீர் சூழ்ந்த வீட்டை வீடியோவாக எடுத்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சசி தரூர் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: டெல்லியில் பெய்து வரும் கனமழையால் எனது வீட்டை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களவைக் கூட்டத் தொடருக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன். என்னுடைய வீட்டின் உள்ளேயும் நீர் வந்துவிட்டது. வீட்டிலுள்ள தரைவிரிப்புகள், ஃபர்னிச்சர்கள், தரையில் உள்ள அனைத்தும் பாழாகி விட்டன. சுமார் ஒரு அடி உயரம் உள்ள தண்ணீர் வீட்டின் அனைத்து அறைகளிலும் சூழ்ந்து நிற்கிறது. இப்பகுதியைச் சுற்றியுள்ள மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழை நீர் போக வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்: மழையால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள்மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறும்போது, ‘‘நான் மக்களவைக்குச் செல்ல ஒரு படகு தேவைப்படுகிறது. கார் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளது. டெல்லியில் பெய்த கனமழையால் எங்கும் வெள்ளம் நிறைந்து நிற்கிறது. எனது வீட்டருகே தண்ணீர் சூழ்ந்து இருந்தது. இதனிடையே டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றினர். அதன் பின்னர்தான் நான் நாடாளுமன்ற கட்டிடத்துக்குச் சென்றேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x