

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. சுல்தான்நகர், மல்லிகார் ஜூன் நகர் ஆகிய இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
கனமழை காரண மாக காவிரி ஆற்றிலும் கன்னிகா ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் பாகமண்டலாவில் 18 செமீ, மடிகேரியில் 13 செமீ அளவுக்கு மழை பதிவானதாக கர்நாடக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குடகு மாவட்டத்தில் தொடரும் கனமழையால் காவிரியின் குறுக் கேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை 550 கன அடி நீர் வந்த நிலையில், வெள்ளிக்கிழமை வினாடிக்கு 13 ஆயிரத்து 437 கன அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல ஹாரங்கி அணைக்கு 2,562, ஹேமாவதி அணைக்கு 7,695 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரு வில் உள்ள கபினி அணைக்கு வினா டிக்கு 20 ஆயிரத்து 113 கன அடி யாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.