நேரு, இந்திரா ஆட்சியில் மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளை காங்கிரஸ் கட்சியே வகித்தது: பாஜக வெளியிட்ட ஆதாரம்

ஜவஹர்லால் நேரு | கோப்புப் படம்
ஜவஹர்லால் நேரு | கோப்புப் படம்
Updated on
1 min read

புது டெல்லி: நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணைந்து சுமுகமாக மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இம்முறை பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே சபாநாயகர் நியமனத்தில் மோதல் மூண்டதால் மக்களவை சபாநாயகர் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற மரபுப்படி துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் வாதிட்டார்.

இதையடுத்து, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவு: கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதும் உயரியதுமான மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும்படி காங்கிரஸ் நிர்பந்தித்திருப்பது தலைகுனிவாகும். இதில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதுதான் மரபு என்றும் அப்படி வங்கினால் மட்டுமே சபாநாயகர் நியமனத்துக்கு ஆதரவு தருவோம் எனவும் ராகுல் காந்தி கூறியிருப்பது வெட்கக்கேடு.

ஜவஹர்லால் நேரு பிரதமராகஇருந்தபோது துணை சபாநாயகர்களாகப் பதவி வகித்த அனந்தசயனம் ஐயங்கார் (1952-56), சர்தார்ஹூக்கம் சிங் (1956-62), எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ராவ் (1962-67) ஆகிய மூவரும் காங்கிரஸ் கட்சியினரே. அந்த காலகட்டத்தில் சபாநாயகர் பதவி வகித்தவர்களும் காங்கிரஸ்காரர்களே. இந்திரா காந்தி ஆட்சிக்காலத்திலும் ரகுநாத்கேசவ் கதில்கார் என்கிற காங்கிரஸ் தலைவர்தான் துணை சபாநாயகராக பதவி வகித்தார்.

அவ்வளவு ஏன் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்ஆட்சி புரிந்து வரும் மாநிலங்களிலும் ஒரே கட்சியிலிருந்துதான் சபாநாயகரும் துணை சபாநாயகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸின் பீமன் பானர்ஜி சபாநாயகர் என்றால் அதே கட்சியை சேர்ந்த ஆசிஷ் பானர்ஜி துணைசபாநாயகராக உள்ளார். தமிழக சட்டசபை சபாநாயகரான மு.அப்பாவு, துணை சபாநாயகரான கு.பிச்சாண்டி இருவரும் திமுக கட்சியினர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in