

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அவையை பாரபட்சமின்றி நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாமக்களவைத் தொகுதியில் இருந்துபாஜக எம்.பி.யாக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓம்பிர்லா. இவர் கடந்த மக்களவையில் சபாநாயகராக 5 ஆண்டு காலம் பதவி வகித்தார்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகராக குரல் ஓட்டெடுப் பின் மூலம் ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமர்த்தினர்.
பின்னர் மக்களவை வழக்கப்படி முதலில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி பேசினார்.
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: நீங்கள் (சபாநாயகர்) எங்களை (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) அவை யில் பேச அனுமதிப்பீர்கள் என்றுஉறுதியாக நம்புகிறேன். அதேநேரத்தில் இந்த அவை எந்தளவுக்கு திறன்மிக்கதாக செயல்படப் போகிறது என்பதுதான் கேள்வி.
இந்தியாவின் குரல் எந்தள வுக்கு இங்கு ஒலிக்கிறது என்பதுமுக்கியம். எனவே, எதிர்க்கட்சிகளின் குரலை அமைதிப்படுத்தும் செயல் ஜனநாயகத்துக்கு சரியானதல்ல. அரசியலமைப்பை எதிர்க்கட்சிகள் காக்க வேண்டும் என்பதைதான் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் நமக்கு எடுத்துரைத்துள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
அவருக்கு அடுத்து மக்களவை யில் 3-வது பெரிய கட்சியாக உள்ள சமாஜ்வாதி தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் பேசும்போது, ‘‘எதிர்க்கட்சி எம்.பி.க்களின் குரல் ஒடுக்கப்பட மாட்டாது என்று எதிர்பார்க்கிறோம். மேலும், எதிர்க்கட்சி எம்.பி.க்களை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்வது போன்ற நடவடிக்கையும் இருக்காது என்று நம்புகிறேன். அனைத்து எம்.பி.க்களுக்கும் சமமான மரியாதையை தருவீர்கள் (சபாநாயகர்) என்று நம்புகிறேன்’’ என்றார்.
இதேபோல் திரிணமூல் எம்.பி. சுதீப் பண்டோபாத்யாயா, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் அவையை பாரபட்சமின்றி நடந்த வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
மக்களவைக்கு 2-வது முறைசபாநாயகராக தேர்ந்தெடுக்கப் பட்ட ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாதொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஓம் பிர்லா, சபாநாயகராக நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்வகையில் செயல்படுவார்.
இந்த மக்களவை சார்பில் உங்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் வழிகாட்டுதலின்படி இந்த அவை செயல்படும். உங்களுடைய இனிமையான சிரிப்பு இந்த அவை முழுவதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.