Last Updated : 10 May, 2018 08:24 AM

Published : 10 May 2018 08:24 AM
Last Updated : 10 May 2018 08:24 AM

வரலாறு மிகவும் முக்கியம் பிரதமரே...

ர்நாடக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும் அவரது சகாக்களும் சுதந்திர இந்தியாவின் ராணுவ வரலாற்றையே மாற்றிச் சொல்கிறார்கள். கர்நாடக மாநிலத்தின் குடகு மலைப் பகுதியைச் சேர்ந்த கரியப்பா, திம்மய்யாவை நேரு அவமானப்படுத்தினார் எனப் பேசியிருக்கிறார்கள். விக்கிபீடியாவைப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும், 1949 ஜனவரி 15-ல் நாட்டின் முதல் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றது திம்மையா அல்ல கே.எம். கரியப்பா என்று.

. கடந்த 1947-48-ல் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் பிரிட்டிஷ் கமாண்டர்களால்தான் வழிநடத்தப்பட்டது. அதன்பிறகு இந்தியா, கரியப்பாவைத் தேர்வு செய்தது. லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த அவரிடம் டெல்லி மற்றும் கிழக்கு பஞ்சாப் படைத் தலைமை ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் கரியப்பா, மேஜர் ஜெனரல் கே.எஸ். திம்மய்யாவை தேர்வு செய்து காஷ்மீர் படைப்பிரிவின் தளபதியாக்கி அனுப்பினார். இருவரின் இனிஷியலிலும் உள்ள ‘கே’ கோதன்தேரா என்ற இனக் குழுப் பிரிவைக் குறிக்கும். இருவருமே காஷ்மீர் பிரச்சினையில் ஹீரோவானார்கள். தளபதியும் ஆனார்கள்.

திம்மய்யாவுக்கும் அப்போது ராணுவ அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனனுக்கும் இடையே சிறுசிறு உரசல்கள் ஏற்பட்டன. கம்யூனிச சிந்தனை கொண்ட மேனனுக்கு திம்மய்யாவை பிடிக்கவில்லை.

தனது பணியில் அடிக்கடி குறுக்கிட்ட அமைச்சரின் போக்கு திம்மய்யாவுக்கும் பிடிக்கவில்லை. 1959-ல் தனது பதவியை கோபத்தில் ராஜினாமா செய்தார் திம்மய்யா. ஆனால் பிரதமர் நேரு கேட்டுக் கொண்டதால் பதவிக் காலம் முடியும்வரை (1961) பணியில் இருந்தார்.

இருவருமே குடகு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாமர மக்களுக்கு இருவரையும் பிரித்துப் பார்ப்பதில் குழப்பம் ஏற்படலாம்.. தப்பில்லை. ஆனால் பிரதமரும் அவரது அலுவலகமும் எப்படி குழப்பம் அடையலாம்?

பாகிஸ்தானுடன் 1947-48, 1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளிலும், சீனாவுடன் 1962-ம் ஆண்டிலும் போரிட்டோம். . 1971-ம் ஆண்டு போரைத் தவிர வேறு எதிலும் தெளிவான வெற்றி கிடையாது நமக்கு. 1962-ல் தோல்விதான். 65-ம் ஆண்டிலும் ஏறக்குறைய அதே நிலைதான். 1947-48 போர் இன்னும் முடிந்ததாகத் தெரியவில்லை. “அரசியல்வாதிகள் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், நமது ராணுவம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும்” என ஒவ்வொரு முறையும் சொல்லப்பட்டு வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல்வாதி - ராணுவம் தொடர்பான ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவமும் அதன் தளபதிகளும் தவறே செய்ய மாட்டார்கள். எந்தப் பின்னடைவுக்கும், தோல்விக்கும் அரசியல்வாதிகளே பொறுப்பேற்றுக் கொள்வார்கள். வெற்றியை இரு தரப்பும் கொண்டாடுவார்கள். 1999-ல் நடந்த கார்கில் போர் பின்னடைவுக்கு பெரும் காரணம் ராணுவத் தலைமையின் தோல்விதான், வாஜ்பாய் அரசு காரணமல்ல. எப்படி பாகிஸ்தான் ராணுவம் யாருக்கும் தெரியாமல் இந்திய எல்லைக்குள் அவ்வளவு தூரம் ஊடுருவ முடிந்தது? உடனே ஒரு கதை தயாரானது. அரசு உளவாளிகளின் செயல்பாடு சரியில்லை என செய்தி பரப்பப்பட்டது. ஒரு சில ராணுவ அதிகாரிகளே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இந்தியா சந்தித்த போர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் யேல் பல்கலையின் பேராசிரியர் ஸ்டீவன் வில்கின்சன் எழுதிய ‘ஆர்மி அண்ட் நேஷன்: தி மிலிட்டரி அண்ட் இந்தியன் டெமாக்ரசி சின்ஸ் இன்டிபென்டன்ஸ்’ என்ற புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ராணுவத்தில் சீக்கியர்களின் ஆதிக்கம் குறித்த அரசியல்வாதிகளின் அச்சத்தையும் மற்ற இனத்தவரைஅதிகம் சேர்க்க விரும்பியது குறித்தும் எழுதியிருக்கிறார். இறுதியில், மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் பாபு ஜகஜீவன்ராம் எடுத்த முடிவு பின்பற்றப்பட்டதாகக் கூறுகிறார்.

1962-ம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, இந்திய ராணுவத்தை மறுகட்டமைப்பு செய்ய முடிந்ததற்கு அதன் பிறகு பதவிக்கு வந்த ராணுவ அமைச்சர்களான ஒய்.பி. சவாணும் ஜகஜீவன்ராமும் தான் காரணம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.

1962-ம் ஆண்டு தோல்விக்கு ராணுவத் தளபதிகளாக இருந்த தாப்பரும் பி.எம்.கவுலும்தான் குற்றம் சாட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதியான கிருஷ்ண மேனன் மீது பழி விழுந்தது.

ராணுவத் தளபதிகள் எப்போதுமே, எதையுமே சரியாகத்தான் செய்வார்கள்.. அரசியல்வாதிகள்தான் அவர்கள் பணியில் குறுக்கிட்டுக் கெடுப்பார்கள். கரியப்பா, திம்மய்யா, சவுத்ரி, மானெக் ஷா ஆகியோருக்கு முடிவுகள் எடுப்பதில் போதுமான சுதந்திரம் கொடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாகியிருக்காது.. சீனர்களுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்திருக்கலாம்... திபெத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கலாம்.. 1965-ல் பாகிஸ்தானை இல்லாமல் செய்திருக்கலாம்.. 1971-ல் வங்கதேச விடுதலைக்குப் பிறகு மேலும் 15 நாள் போரிட்டிருந்தால், மேற்கு பாகிஸ்தானைக் கூட ஆக்கிரமித்திருக்கலாம்.. என பிரச்சாரம் நடக்கிறது.

. ‘கரியப்பா, திம்மய்யா, சவுத்ரி ஆகியோர் அப்போதைய பிரதமர்களிடம், தயவுசெய்து இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என கெஞ்சினார்கள். ஆனால் அன்னிய சக்திகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நேரு - காந்தி ஆட்சியாளர்கள் அதற்கு மறுத்தனர்’ என்கிறார்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். மோடியும் இங்கிருந்துதான் வந்தவர். அதனால் மோடியும் அவரது கூட்டாளிகளும் இப்படித்தான் உண்மை தெரியாமல் பேசுவார்கள்.

சேகர் குப்தா,

‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x