Last Updated : 28 Aug, 2014 07:47 PM

 

Published : 28 Aug 2014 07:47 PM
Last Updated : 28 Aug 2014 07:47 PM

கல்விக்கடன் மறுக்கப்படும் மீனவர்களின் பிள்ளைகள்: மீண்டும் கடல் தொழிலுக்கே செல்லும் அவலம்

மீனவர்களின் குழந்தைகளுக்கு மேற்படிப்பிற்காக வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் பாரப்பட்சத்துடன் நடந்து கொள்வதாக மீனவப் பிரநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராமேசுவரம் முருங்கைவாடியைச் மீனவர் ராமு - முத்துலட்சுமி தம்பதியினருக்கு இருளேஸ்வரன் என்ற பையனும் சந்தியா, திவ்யா, சந்தான மெசியா ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10.08.2004 அன்று கச்சதீவிற்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைகடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நடுக்கடலில் ராமு பலியானார்.

கணவர் இறந்து பின்னர் கருணை அடிப்படையில் முத்துலட்சுமி சத்துணவு உதவியாளர் பணி வழங்கப்பட்டு தற்போது ரூ. 2,000 ஊதியதில் குடும்பத்தை நடத்தி வருகின்றார்.

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டில் பலியான ராமுவின் மகன் இருளேஸ்வரன் (19) பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 1026 மதிப்பெண்கள் பெற்று கவுன்சிலிங் முறையில் சிவகங்கையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்து. வங்கி கடன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் உறவினர்களிடம் கடன்பட்டு மகனை கல்லூரியில் சேர்த்தார் தாயார் முத்துலட்சுமி.

இதுகுறித்து மீனவ மாணவர் இருளேஸ்வரன் கூறியதாவது, தற்போது இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். கடந்த ஒரு வருடாக காலமாக ராமேசுவரத்திலுள்ள வங்கிகளில் கல்விக் கடனுக்காக அலைந்து வருகின்றேன். தந்தையார் தவறி விட்டதால் தாயாருக்குக்கு பான்கார்டு இருக்கிறதா? வருமான வரி கட்டுகீறிர்களா? மாசா மாசம் 1,000க்கு மேல வட்டி கட்டனும் முடியுமா என பல்வேறு காரணங்கள் கூறி அலைக்கழிகின்றனர். வங்கிக்கடன் கிடைக்கா விட்டால் படிப்பை விட்டு அப்பா போன்று கடலுக்கு தான் போகனும் என்றார்.

ராமேசுவரம் மீனவப் பிரதிநிதி கருணாமூர்த்தி நமது செய்தியாளர்களிடம் கூறும்போது, "மீனவர்களின் குழந்தைகளுக்கு கல்விக் கடன் வழங்குவதில் வங்கிகள் பாரசட்சத்துடன் நடந்து கொள்கின்றன. இதனால் நன்றாகப் படிக்க கூடிய பல்வேறு மீனவ மாணவர்கள் 12ம் வகுப்போடு நிறுத்தி விட்டு கடலுக்குச் செல்லும் அவலம் தான் மீனவ குடும்பங்களில் நிலவுகிறது. மீனவர்களின் குழந்தைகளுக்கு வட்டியில்லா கடனும், கல்விக்கடனில் மீனவர்களுக்கு இடஒதுக்கீடும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, "வங்கி கடன் பெற மாணவ – மாணவியர்கள் தாங்கள் குடும்ப அட்டைநகல், இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, பெற்றோர் வருமானச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை (தந்தை அல்லது தாய்), பான்கார்டு நகல், கல்லூரியில் சேர்ந்ததற்கான அனுமதி கடிதம், கல்லூரியில் இருந்து வழங்கப்பட்ட கட்டணச்சான்று, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியன போதுமானவை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2013–14–ம் ஆண்டில் சுமார் 1600 மாணவ–மாணவியர்களுக்கு பல்வேறு வங்கிகளின் மூலமாக ரூ.25 கோடிக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் மீனவ மாணவர்களும் அடக்கம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x