Published : 26 Jun 2024 05:59 AM
Last Updated : 26 Jun 2024 05:59 AM
லக்னோ: பிரயாக்ராஜில் 2025-ம் ஆண்டில் மகா கும்பமேளா நடைபெற உள்ளதையொட்டி பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
2025-ம் ஆண்டில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக தலைநகர் லக்னோவில் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அப்போது மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, கூட்டத்தினரை கட்டுப்படுத்துதல், பக்தர்களுக்குத் தேவையான வசதிகள், தங்குமிடங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.
பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போலீஸார் பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அதிகாரிகளிடையே அவர் பேசியதாவது: நாட்டின் செழுமையான மதமற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கும் உலகத்துக்கும் இடையே கும்பமேளா விழா ஒரு பாலமாக உள்ளது. எனவே, இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு, அடிப்படை வசதி மற்றும் தூய்மையை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த கும்பமேளா விழாவானது, உத்தர பிரதேசம் மற்றும் பிராண்ட் இந்தியாவை உயர்த்துவதற்கான வாய்ப்பாக இருக்கும்.
அதிக அளவில் வரும் பக்தர்களை கட்டுப்படுத்துவது போலீஸாருக்கு சவாலான பணியாக இருக்கும். எனவே, இந்தப் பணிகளுக்கு போலீஸார் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும்.
இந்த நிகழ்வின்போது எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் தடுக்க, தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டும். இதற்கான ஏஐ கருவிகளை போலீஸார் பயன்படுத்தலாம். இதற்கான விரிவான திட்டங்களை போலீஸார் உருவாக்கவேண்டும். ஏஐ கருவிகள் மூலம் பக்தர்களை போலீஸார் எளிதில் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். விழாவுக்கு வரும்பக்தர்களிடையே போலீஸார் கனிவாகவும், கண்ணியமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
1.5 லட்சம் கழிப்பறைகள்: பக்தர்கள் வசதிக்காக பிரயாக் ராஜ் பகுதியில் 1.5 லட்சம் கழிப் பறைகள் கட்டப்படவுள்ளன. மேலும் விழாவின்போது 10 ஆயிரம் துப்புரவுத் துறை ஊழியர்கள் பணி யாற்றவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT