மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதனை தெரிவித்தார். இதுதொடர்பாக தற்காலிக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளாகவும், மற்ற நியமனங்கள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் நேரு குடும்பத்தைச் மூன்றாவது நபர் ராகுல் காந்தி ஆவார். அவருக்கு முன், சோனியா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்த பதவியை வகித்தனர்.

இன்னொருபுறம், 18வது மக்களவைக்கான சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (ஜூன் 26) நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரை தேர்வு செய்தது.

ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் உள்ளன.

முன்னதாக இன்று மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராக பதவியேற்றார். அரசியல் சாசன பிரதியை கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார். அவர் பதவியேற்கும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in