“கட்சியை பலவீனப்படுத்த நினைத்தவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன்’’ - சரத் பவார்

மகள் சுப்ரியா சுலே உடன் சரத் பவார்
மகள் சுப்ரியா சுலே உடன் சரத் பவார்
Updated on
1 min read

மும்பை: கட்சியை பலவீனப்படுத்த நினைத்தவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட மாட்டார்கள் என தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் இருந்த நிலையில், அவரது அண்ணன் மகனான அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிர துணை முதல்வராக பொறுப்பேற்றார். அஜித் பவார் தலைமையில் உள்ள கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றதை அடுத்து, சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) என்ற பெயரில் கட்சியை நடத்தி வருகிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில், பாஜக கூட்டணியில் 4 தொகுகளில் போட்டியிட்ட அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதோடு, மோடி அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேலுக்கு கேபினெட் அமைச்சர் பதவி கோரப்பட்ட நிலையில், இணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்க பாஜக முன்வந்தது. தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியையாவது வழங்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியும் அதன் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த அஜித் பவார், பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்றும் அதுவரை காத்திருக்கப் போவதாகவும் கூறி இருந்தார்.

மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு போதிய வெற்றி கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சியான பாஜகவும் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க மறுப்பதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் வருந்துவதாகவும், இதனால் மீண்டும் சரத் பவாரோடு சேர அவர்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அவர்கள் அதற்கு முன்பாக, சரத் பவாரோடு இணைய திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு வரக்கூடியவர்களை சரத் பவார் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு அவர் பதில் அளித்துள்ளார். "கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என நினைத்தவர்கள் மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட மாட்டார்கள். அதேநேரத்தில், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாத, கட்சிக்கு பலம் சேர்க்கக்கூடிய தலைவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதுவும் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களை ஏற்றுக்கொள்ளலாம் என்று சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்" என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in