Published : 24 Jun 2024 07:11 PM
Last Updated : 24 Jun 2024 07:11 PM

“எமர்ஜென்சி, கோஷங்கள்...” - பிரதமர் மோடியின் அறிவுரையும், காங்கிரஸின் பதிலடியும்!

புதுடெல்லி: அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, “மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களை அல்ல” என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, “50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள். நாங்கள் மக்களுக்காக, மக்களவையிலும், தெருக்களிலும் அனைவருக்கும் முன்பாக குரல் (கோஷம்) எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்” என்று பதிலடி தந்துள்ளார்.

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று நாம் ஜூன் 24-ம் தேதி சந்திக்கிறோம். நாளை ஜூன் 25. நமது அரசியலமைப்பின் மாண்பை நிலைநிறுத்த தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும், பாரதத்தின் ஜனநாயக மரபுகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் ஜூன் மாதம் 25-ம் தேதி மறக்க முடியாத நாள். இந்திய ஜனநாயகத்தில் ஓர் இருண்ட அத்தியாயம் எழுதப்பட்டதுடன் 50-ம் ஆண்டு நாளை தொடங்குகின்றது.

அரசியலமைப்புச் சட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, கிழித்தெறியப்பட்டு, ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்டதை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆன இந்த நிலையில், நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பெருமையுடன் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இதுபோன்ற கேலிக்கூத்து இனி ஒருபோதும் நடக்க அனுமதிக்கப்படாது என்று நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி துடிப்பான ஜனநாயகத்தை உறுதி செய்யவும், சாமானிய மக்களின் கனவுகளை நிறைவேற்றவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும். இதன் மூலம், நமது பொறுப்பு மூன்று மடங்கு அதிகரிக்கிறது. இரண்டு முறை அரசை நடத்திய அனுபவத்துடன், மூன்றாவது பதவிக்காலத்தில் மூன்று மடங்கு கடினமாக உழைப்போம் என்று நான் இன்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த புதிய இயக்கத்துடன் முன்னோக்கி நகர்ந்து, மூன்று மடங்கு முடிவுகளை நாங்கள் எட்டுவோம்.

மதிப்புக்குரிய உறுப்பினர்களே, நம் அனைவரிடமும் நாடு பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை மக்கள் நலனுக்காகவும், சேவைக்காகவும் பயன்படுத்தி, மக்கள் நலனுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான பங்களிப்பையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுவரை ஏமாற்றம் இருந்தபோதிலும், 18-வது மக்களவையில், எதிர்க்கட்சிகள் தங்கள் பங்கைத் திறம்பட ஆற்றி, நமது ஜனநாயகத்தின் மாண்பை நிலைநிறுத்தும் என்று நம்புகிறேன். இந்த எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்.

சாமானிய மக்கள் அவையில் விவாதத்தையும், விடாமுயற்சியையும் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் கோபம், நாடகம் மற்றும் தொந்தரவு ஆகியவற்றை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பொருளைத் தேடுகிறார்கள். கோஷங்களை அல்ல. நாட்டுக்கு ஒரு நல்ல மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சி தேவை. 18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சாமானிய மனிதனின் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பாடுபடுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பேசியிருந்தார்.

காங்கிரஸ் ரியாக்‌ஷன்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டள்ள பதிவில், “பிரதமர் மோடி இன்று வழக்கத்தை விட நீண்ட உரை நிகழ்த்தினார். தெளிவான தார்மிக மற்றும் அரசியல் தோல்விக்குப் பிறகும் அவரிடம் ஆணவம் அப்படியே இருக்கிறது. பல முக்கியமான விஷயங்கள் குறித்து மோடி ஏதாவது பேசுவார் என்று நாடு எதிர்பார்த்தது. நீட் மற்றும் பிற தகுதித் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தது குறித்து இளைஞர்களிடம் அவர் வருத்தம் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வினாத்தாள் கசிவு எனும் அவரது அரசாங்கத்தின் மிகப்பெரிய மோசடி மற்றும் ஊழல் குறித்து அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து மற்றும் ரயில்வேயின் மோசமான நிர்வாகக் கோளாறு குறித்தும் மோடி மவுனம் காத்தார். கடந்த 13 மாதங்களாக மணிப்பூர் வன்முறையின் பிடியில் உள்ளது. ஆனால் மோடி, அந்த மாநிலத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. அதோடு, அங்கு புதிதாக ஏற்பட்ட வன்முறை குறித்தும் அவர் தனது இன்றைய உரையில் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை.

அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, எக்சிட் போல்-பங்குச் சந்தை ஊழல் என எதுகுறித்தம் மோடி பேசவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மோடி அரசு நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்திலும் பிரதமர் மோடி மவுனம் காத்தார்.

மோடி... நீங்கள் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். 50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள். அது மக்களால்தான் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிரானது. இருந்த போதிலும் அவர் பிரதமராகி விட்டதால், அதற்கான பணிகளை அவர் ஆற்ற வேண்டும்.

மக்களுக்குத் தேவை வாழ்வாதாரம்தான், கோஷங்கள் அல்ல என்று கூறி இருக்கிறீர்கள். இதை நீங்களே நினைவில் கொள்ளுங்கள். ஒருமித்த கருத்தை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்த எதிர்க்கட்சிகளும் இண்டியா கூட்டணியும் விரும்புறது. நாங்கள் மக்களுக்காக, மக்களவையிலும், தெருக்களிலும் அனைவருக்கும் முன்பாக குரல் எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்! வாழ்க இந்திய ஜனநாயகம்!” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x