

பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் புதிதாக எந்த ஒரு அறிவிப்பும், திட்டமும் இல்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பிரதமர் உரை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கூறியதாவது: "பிரதமர் நரேந்திர மோடியின் முதல் சுதந்திர தின உரையில் புதிதாக எந்த திட்ட அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. புதிய எண்ணங்கள் அவர் உரையில் பிரதிபலிக்கவில்லை. புதிய முயற்சிகளும் அதில் தென்படவில்லை. சுதந்திர தின உரையில் மிகச்சாதாரண விஷயங்களை குறித்தே அவர் பேசியிருக்கிறார்.
மோடியின் முதல் சுதந்திர தின உரை இது என்பதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு மேற்கொள்ளவிருக்கும் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைப்பதாக அவரது இந்த உரை அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது அவ்வாறாக அமையவில்லை. அவரது உரையால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை.
தவிர, அந்த உரையில் ஜாதியம், மதவாதம் பற்றி மோடி விமர்சித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியே மதவாத அரசியலைத்தான் பின்பற்றுகிறது என்பதை அவர் மறந்துவிட்டார் போலும். பிரதமர் மோடியே, மதவாதம் எனும் ஏணியில் ஏறியே அரசியல் உச்சத்தை அடைந்துள்ளார்.
இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என பேசியிருக்கிறார். இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரச்சாரம். இதைத்தான் தொலைக்காட்சியில் தினமும் 10 முறையாவது வித்யாபாலன் செய்கிறாரே. இதில் புதிதாக மோடி சொல்வதற்கு என்ன இருக்கிறது.
ஏழை மக்களுக்கு வங்கிக்கணக்கு பற்றி பேசியிருக்கிறார். இதையும் ஏற்கெனவே ஐ.மு. கூட்டணி அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேறு வடிவில் செயல்படுத்தி வந்தது. எனவே மோடி உரையில் புதிதாக எதுவும் இல்லை" இவ்வாறு அவர் கூறினார்.