“தார்மிக தோல்விக்குப் பின்னும் பிரதமர் மோடியின் ஆணவம் போகவில்லை” - கார்கே தாக்கு

“தார்மிக தோல்விக்குப் பின்னும் பிரதமர் மோடியின் ஆணவம் போகவில்லை” - கார்கே தாக்கு
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தார்மிக மற்றும் அரசியல் தோல்விக்குப் பிறகும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவம் போகவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டள்ள பதிவில், “பிரதமர் மோடி இன்று வழக்கத்தை விட நீண்ட உரை நிகழ்த்தினார். தெளிவான தார்மிக மற்றும் அரசியல் தோல்விக்குப் பிறகும் அவரிடம் ஆணவம் அப்படியே இருக்கிறது.

பல முக்கியமான விஷயங்கள் குறித்து மோடி ஏதாவது பேசுவார் என்று நாடு எதிர்பார்த்தது. நீட் மற்றும் பிற தகுதித் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தது குறித்து இளைஞர்களிடம் அவர் வருத்தம் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வினாத்தாள் கசிவு எனும் அவரது அரசாங்கத்தின் மிகப்பெரிய மோசடி மற்றும் ஊழல் குறித்து அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து மற்றும் ரயில்வேயின் மோசமான நிர்வாகக் கோளாறு குறித்தும் மோடி மவுனம் காத்தார். கடந்த 13 மாதங்களாக மணிப்பூர் வன்முறையின் பிடியில் உள்ளது. ஆனால் மோடி, அந்த மாநிலத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. அதோடு, அங்கு புதிதாக ஏற்பட்ட வன்முறை குறித்தும் அவர் தனது இன்றைய உரையில் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை.

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, எக்சிட் போல்-பங்குச் சந்தை ஊழல் என எதுகுறித்தம் மோடி பேசவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மோடி அரசு நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்திலும் பிரதமர் மோடி மவுனம் காத்தார்.

மோடி, நீங்கள் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். 50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள். அது மக்களால்தான் முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிரானது. இருந்த போதிலும் அவர் பிரதமராகி விட்டதால், அதற்கான பணிகளை அவர் ஆற்ற வேண்டும். மக்களுக்குத் தேவை வாழ்வாதாரம்தான், கோஷங்கள் அல்ல என்று கூறி இருக்கிறீர்கள். இதை நீங்களே நினைவில் கொள்ளுங்கள்.

ஒருமித்த கருத்தை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்த எதிர்க்கட்சிகளும் இண்டியா கூட்டணியும் விரும்புகிறது. நாங்கள் மக்களுக்காக, மக்களவையிலும், தெருக்களிலும் அனைவருக்கும் முன்பாக குரல் எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்! வாழ்க இந்திய ஜனநாயகம்!” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in