

லக்னோ: உ.பி. கான்பூர் ஓட்டலில் பெண் காவலருடன் தங்கியிருந்த டிஎஸ்பி.,யை காவலராக பதவியிறக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச காவல்துறையின் 26-வது பட்டாலியனில் கடந்த 2021-ம் ஆண்டில் டிஎஸ்பி அந்தஸ்தில் துணை கமாண்டராக பணியாற்றியவர் கிருபா சங்கர் கானோஜியா. இவர் உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் பணியமர்த்தப்பட்டிருந்தார். இவர் தனக்குசொந்த வேலை இருப்பதாக கூறி, ஒரு நாள் விடுப்பில் சென்றுள்ளார். தனது செல்போனை சுவிட் ஆப் செய்து விட்டார்.
கிருபா சங்கரை அவரது மனைவியால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் தனது கணவரை காணவில்லை என்றும், செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று உன்னாவ் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். இதையடுத்து கிருபா சங்கரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். அவரது செல்போன் கான்பூரில் உள்ள ஓட்டல் அருகே சுவிட் ஆப் செய்யப்பட்டது தெரிந்தது. அங்கு விரைந்த போலீஸார் ஓட்டலில் சோதனை நடத்தியபோது, டிஎஸ்பி கிருபா சங்கர், பெண் காவலர் ஒருவருடன் தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கிருபா சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது. இந்த விவகாரம் குறித்து இறுதி விசாரணை நடத்திய உ.பி.டிஜிபி, கிருபா சங்கரை டிஎஸ்பி பதவியிலிருந்து காவலராக பதவியிறக்கம் செய்து உத்தரவிட்டார்.