ஆந்திராவில் சந்திரபாபு முதல்வரானதும் ஜெகனுக்கு சொந்தமான சேனல் நீக்கம்: கேபிள் ஆபரேட்டர்கள் நடவடிக்கை

ஆந்திராவில் சந்திரபாபு முதல்வரானதும் ஜெகனுக்கு சொந்தமான சேனல் நீக்கம்: கேபிள் ஆபரேட்டர்கள் நடவடிக்கை
Updated on
1 min read

ஹைதராபாத்: ஆந்திராவின் கேபிள் டிவிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல், டிவி 9, சாக்சி டிவி, என்டிவி மற்றும் 10 டிவி ஆகிய நான்குசேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதில், சாக்சி டிவியின் இந்திரா டெலிவிஷன் நிறுவனம் ஒஎஸ் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படாமல் இருப்பது இது இரண்டாவது முறையாகும். ஜூன் 6-ம் தேதி இந்த சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுவது முதன்முறையாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்தவெள்ளி முதல் இந்த சேனல்கள் கேபிள் டிவிகளில் ஒளிபரப்பாகவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், ஆந்திர மாநில முதல்வர் ஆகியோருக்கு ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். நிரஞ்ஜன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அவர் அதில் கூறியுள்ளதாவது:

புதிதாக ஆட்சியமைத்துள்ள தெலுங்குதேச கட்சி, ஆந்திர பிரதேச கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்துக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்துள்ளது. அதன் வழிகாட்டுதல் பேரில் டிவி9, என்டிவி, 10 டிவி மற்றும் சாக்சி டிவி சேனல்களின் ஒளிபரப்பு முடக்கப்பட்டுள்ளது. இது, ஜனநாயக கொள்கைகளின் மீதான நேரடித் தாக்குதல். இத்தகைய தலையீடு பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவி சேனல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சந்திரபாபு நாயுடுவின் இந்த சேனல் முடக்க மறைமுக நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், ஒஎஸ்ஆர் காங்கிரஸின் ஜெகன் தலைமையிலான ஆட்சியின்போதும், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவான டிவி5, ஏபிஎன்ஆந்திரா ஜோதி ஆகிய செய்தி சேனல்கள் கேபிள் டிவி ஒளிபரப்பிலிருந்து நீக்கினர். அதற்கான விலையை அவர்கள் தற்போது கொடுக்கின்றனர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in