

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ்,முதுநிலை டிப்ளமா படிப்புகளில் மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் இத்தேர்வு நேற்று (ஜூன் 23) காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடக்க இருந்தது. தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படித்து முடித்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். தொலைவில் உள்ளவர்கள் முந்தைய நாளான 22-ம் தேதி இரவே தங்கள் ஊர்களில் இருந்து புறப்பட்டனர்.
இந்நிலையில், இத்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) 22-ம் தேதி இரவு 9.30 மணி அளவில் அறிவித்தது. ‘போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மை குறித்து புகார் எழுந்துள்ளதால், மாணவர் நலன், தேர்வின் வெளிப்படை தன்மையை காக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிரமத்துக்கு வருந்துகிறோம். தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால், தேர்வுக்கு தயாரானவர்களும், தேர்வு எழுத வெளியூர்களில் இருந்து ரயில், பேருந்துகளில் புறப்பட்டவர்களும் பெரிதும் அவதியடைந்தனர்.