Published : 24 Jun 2024 05:26 AM
Last Updated : 24 Jun 2024 05:26 AM
மும்பை: மும்பையில் கடந்த மாதம் முறிந்துவிழுந்த பிரம்மாண்டமான விளம்பரபலகை வைப்பதற்காக அனுமதி வழங்கிய அரசு ரயில்வே போலீஸ்(ஜிஆர்பி) ஆணையர் தனது மனைவி நிறுவனம் மூலம் ரூ.46 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மும்பையில் கடந்த மே 13-ம்தேதி திடீரென பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது. அப்போது, கட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே இருந்த ஒரு பிரம்மாண்டமான விளம்பர பலகை (ஹோர்டிங்) முறிந்து விழுந்தது. இதன் அடியில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
அரசு ரயில்வே போலீஸுக்கு (ஜிஆர்பி) சொந்தமான இடத்தில் ஈகோ மீடியா நிறுவனம் விளம்பரப் பலகையை பொருத்திக் கொள்ள ஜிஆர்பி ஆணையர் குவைசர் காலித் அனுமதி வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் கீர்த்தி சோமய்யா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ஜிஆர்பி ஆணையர் காலித் மனைவி சும்மன்னா காலித் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மஹபத்ரா கார்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஈகோ மீடியா நிறுவனத்தின் இயக்குநர் பாவேஷ் பிந்தே பிரம்மாண்ட விளம்பர பலகை வைப்பதற்கான அனுமதி பெறுவதற்காக மஹபத்ரா நிறுவனத்துக்கு ரூ.46 லட்சம் லஞ்சம் வழங்கி உள்ளார். இந்த தொகை வங்கி மூலம் பரிமாறியதற்கான ஆதாரத்தை எஸ்ஐடி திரட்டி உள்ளது.முகமது அர்ஷத் கான் மூலம் இந்தத் தொகை கைமாறி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மகாராஷ்டிர துணை முதல்வருக்கு ஒரு கடிதம்எழுதி இருப்பதாக கீர்த்தி சோமய்யா தெரிவித்துள்ளார். அதில், விளம்பரப் பலகை வைக்க அனுமதி தருவதற்காக லஞ்சம் வாங்கிய ஜிஆர்பி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதவிர, மும்பையின் கட்கோபர் மற்றும் தாதர் பகுதிகளில்சட்டவிரோதமாக விளம்பரப்பலகை வைப்பதற்காக ரயில்வே போலீஸாருக்கும் பிரிஹன் மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கும் ரூ.5 கோடியை ஈகோ மீடியா லஞ்சம் வழங்கி உள்ளதாகவும் சோமய்யா குற்றம் சாட்டி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT