Published : 24 Jun 2024 06:04 AM
Last Updated : 24 Jun 2024 06:04 AM
பாட்னா: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், பிஹார் மாநிலத்தில் 2 இன்ஜினியர்கள், ஒரு கிளார்க் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தனது பி.ஏ.விடம் தாராளமாக விசாரணை நடத்தலாம் என பிஹார்முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
நீட் தேர்வு கடந்த மே 5-ம்தேதி நடைபெற்றது. பலர் முழுமதிப்பெண் பெற்றதால், இதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஒரு தேர்வு மையத்தில் தாமதம் ஏற்பட்டதால் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. தேர்வுக்கு முதல்நாள் பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்ததாகவும், அதை ரூ.32 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இடைத்தரகர்கள் விற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக இடைத்தரகர்கள், மாணவர்கள் என 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவில் முக்கியமான இடைத்தரகர் சிக்கந்தர் பி யாதவ்வேந்து. இவருக்கு நீட் தேர்வுக்கு முதல் நாள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கும்படி, பிரதீப் குமார் என்றகிளார்க்கிடம் பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் பி.ஏ (நேர்முக உதவியாளர்) ப்ரீத்தம் குமார் கூறியுள்ளார். அவர் கண்காணிப்பு இன்ஜினியர் உமேஷ் ராய், ஜூனியர் இன்ஜினியர் தர்மேந்திர குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சிங்கந்தர் யாதவுக்கு அறை ஒதுக்கியுள்ளார். இது குற்றம்சாட்டப்பட்டவர்களின் போன்களை ஆய்வு செய்ததில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நீட் வினாத்தாள் கசிவில் முக்கிய குற்றவாளியான சிக்கந்தர் யாதவுக்கு அறை ஒதுக்கிய கிளார்க் பிரதீப் குமார், பொறியாளர்கள் உமேஷ் ராய், தர்மேந்திர குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு குற்றவாளிக்கு தனது பி.ஏ ப்ரீத்தம் குமார் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறித்து தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை பாஜக அரசிய லாக்க விரும்புகிறது. இதுகுறித்து தனது பி.ஏ.விடம் விசாரணை அதிகாரிகள் தாராளமாக விசாரணை நடத்தலாம். நீட் வழக்கை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் எனது பி.ஏ. ப்ரீத்தம் குமாரிடம் விசாரணை நடத்துவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT