

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் உரி பகுதி அருகே எல்லை கட்டுப்பாட்டு கோடுவழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் தீவிரவாதிகள் பேருந்து ஒன்றின் மீது கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர். மறுநாள் தோடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனைச் சாவடி ஒன்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் சோபூர் அருகேயுள்ள ரஃபியாபாத் கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். கடந்த 2 வாரங்களாகவே காஷ்மீர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் காஷ்மீரின் உரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்று முன்தினம்இரு தீவிரவாதிகளின் நடமாட்டத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து கோஹல்லான் பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. முதலில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் ஒருவரின் உடல் மட்டுமே இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு படை யினர் தொடர்ந்து தேடுதல் வேட் டையில் ஈடுபட்டுள்ளனர்.