Published : 08 May 2018 09:48 AM
Last Updated : 08 May 2018 09:48 AM

பிரதமர் நரேந்திர மோடிக்கு சித்தராமையா நோட்டீஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வழக்கறிஞர் மூலம் நேற்று அவதூறு நோட்டீஸ் அனுப்பினார்.

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் சில நாட்களுக்கு முன்பு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சித்தராமையா அரசை, ‘சித்த ரூபய்யா அரசு’ என்று விமர்சனம் செய்தார். மேலும் 10 சதவீத கமிஷன் அரசு என்றும் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் சித்தராமையா நேற்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதில், தனக்கு எதிரான விமர்சனத்துக்கு மோடி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் இல்லையெனில் ரூ.100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக விளம்பரங்களில் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கும் சித்தராமையா தரப்பில் அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே முதல்வர் சித்தராமையா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சுத் திறமையால் கர்நாடக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார். நான் அவரோடு போட்டியிடவில்லை. பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுடன்தான் போட்டியிடுகிறேன். அனைத்து விவகாரங்கள் குறித்து பொதுமேடையில் என்னுடன் விவாதிக்க எடியூரப்பா தயாராக இருக்கிறாரா? பிரதமர் மோடி விரும்பினால் அவரும் பங்கேற்கலாம்.

பிரதமர் மோடி கன்னட நகரங்கள், நபர்களின் பெயர்களை தவறாக உச்சரித்து வருகிறார். மற்றவர்களின் உரைநடையை விமர்சிப்பது மோடியின் இயல்பு. எனினும் அவரது தவறான உச்சரிப்புகளை கர்நாடக மக்கள் பெருந்தன்மையுடன் மன்னித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x