Published : 23 Jun 2024 06:42 AM
Last Updated : 23 Jun 2024 06:42 AM
ஜோத்பூர்: ஜோத்பூரில் நடைபெற்ற மதக் கலவரத்தில் 2 போலீஸார் காயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரின் சூர் சாகர் பகுதியில் ராஜாராம் சர்க்கிள் அருகே ஈத்கா மசூதி உள்ளது.
இந்த மசூதியின் பின்புறத்தையொட்டி நேற்று முன்தினம் சிலர் இரும்பு கேட்அமைத்து தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ஈத்கா மசூதிக்கு வரும் முஸ்லிம்களுக்கு இடையூறாக உள்ளது என்று கூறி சிலர் தட்டிக் கேட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 2 மதத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது பின்னர் மதக் கலவரமாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம்ஏற்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் 2 போலீஸார் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஜோத்பூர் மேற்கு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் குமார் யாதவ் கூறும்போது, “சாதாரணமாக தொடங்கிய சண்டை பின்னர் மதக் கலவரமாக மாறிவிட்டது. இந்த கலவரத்தின்போது ஒரு கடை, ஒரு டிராக்டர் தீவைத்து எரிக்கப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பை, சிலர் சூறையாடியுள்ளனர். போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர். மேலும் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி கும்பலைக் கலைத்தனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக் குள் உள்ளது’’ என்றார்.
மோதல் தொடர்பாக 2 பிரிவினரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த கலவரம் தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கைகளை போலீஸார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT