Published : 05 Aug 2014 03:01 PM
Last Updated : 05 Aug 2014 03:01 PM

டெல்லியில் ஆட்சியமைக்கும் சிக்கலுக்கு என்ன தீர்வு?: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது குறித்து ஐந்து வாரங்களுக்குள் பதில் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். இதனால், டெல்லி அரசு கலைக்கப்பட்டது. மறுதேர்தல் அறிவிக்கப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘சட்டசபையை கலைத்துவிட்டு, மறுதேர்தல் நடத்தும்படி அமைச்சரவை பரிந்துரை அளித்தது. ஆனால், துணைநிலை ஆளுநர் சட்டசபையை கலைக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பது தவறான செயல். ஆகையால் மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டது.

இம்மனு, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சலமேஸ்வர், ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா ஆகியோரடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் வாதிட்டதாவது:

அரசியல் சாசன சட்டப்பிரிவு 356-ன் படி, ஆட்சியைக் கலைத் தால், உடனே சட்டசபையையும் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும். ஆனால், எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், இப்பிரிவை பயன்படுத்த சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆட்சியைக் கலைத்துவிட்டு, சட்டசபையை தற்காலிகமாக முடக்கி வைத்து, மீண்டும் வேறு ஆட்சி அமைய அனுமதிக்க வேண்டும். இந்த முடிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆட்சியைக் கலைப்பதும், சட்டசபையைக் கலைப்பதும் ஒன்றோடு ஒன்று இணைந்த முடிவு.

டெல்லி அரசைப் பொறுத்த மட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. சட்டசபை முடக்கி வைக் கப்பட்டுள்ளது. வேறு ஆட்சி அமை வதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியாது. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள் வீணாக வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, ‘மாற்று அரசு அமைவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘டெல்லியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. ஒரு கட்சி பெரும்பான்மை இல்லை என்கிறது. அடுத்த கட்சி ஆட்சியமைக்க விருப்பம் இல்லை என்கிறது.

இன்னொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பலம் இல்லை. இந்நிலையில், மத்திய அரசு ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வளவு நாள் வீணாக வீட்டில் இருப்பார்கள்? இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தால், உடனே இந்த மனுவை தள்ளுபடி செய்யத் தயார்,’ என்று தெரிவித்தனர்.

மேலும், ‘டெல்லியில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வுகாணும் வகையில், மத்திய அரசு ஐந்து வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x