

ஸ்ரீநகர்: உலக நன்மைக்கான சக்தியாக யோகா கலையை உலகம் பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மக்களுடன் இணைந்து பல்வேறு யோகாசனங்களை பிரதமர் மோடி செய்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதேச யோகா தினத்தில் யோகா மற்றும் தியானத்தின் பூமியான காஷ்மீருக்கு வரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. யோகா தரும் சக்தியை நகரில் உணர்கிறோம். காஷ்மீர் தேசத்தில் இருந்து சர்வதேச யோகா தினத்தைமுன்னிட்டு நாட்டின் அனைத்து மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா செய்து வருபவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் ஆரோக்கியத்துடன் இருக்கயோகா அவசியமான ஒன்றாக உள்ளது.
யோகா கலையை அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். யோகா வலிமை மற்றும் ஆரோக்கியத்தை வளர்க்கிறது. கடந்த 2014-ல், ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகாதினத்தை நான் முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை அப்போது 177 நாடுகள் ஆதரித்தன. இது ஒரு சாதனையாகும். மக்கள் தங்கள் நலன், உலக நலனுடன் இணைந்திருப்பதை உணர யோகா உதவியுள்ளது. உலக நன்மைக்கு முக்கியமான, சக்திவாய்ந்த முகவராக யோகாவை உலகம் பார்க்கிறது.
கடந்த கால நிகழ்வுகளை பற்றி நினைக்காமல், தற்போது நலமாக வாழ யோகா உதவுகிறது. நமது உள்ளுணர்வு அமைதியாக இருக்கும்போதுதான், உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
பத்ம விருது பெற்ற பிரான்ஸைச் சேர்ந்த 101 வயதான யோகா ஆசிரியை சார்லட் சோபின் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளார். அவரது யோகா சேவையைப் பாராட்டி பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் இந்தியாவுக்கு வரவில்லை.ஆனால் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். இன்று, யோகா குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. யோகா தொடர்பாக உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகின்றன.
உலகம் முழுதும் யோகா செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நான் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள தலைவர்கள் யோகா தொடர்பாக என்னிடம் கேள்விகள் கேட்கின்றனர். அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகா மாறி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தால் ஏரியில் செல்பி எடுத்த பிரதமர்: யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் யோகா செய்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செல்பி எடுத்துக் கொண்டார். மேலும் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அந்த புகைப்படங்களையும் அவர்பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் மோடி கூறுகையில் ‘‘யோகா நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்ரீநகரில் எடுத்த செல்பியை இங்கு வெளியிட்டுள்ளேன். நகர் தால் ஏரியில் ஈடு இணையற்ற வகையில் துடிப்பான யோகா கலை அரங்கேறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்