Published : 22 Jun 2024 07:56 AM
Last Updated : 22 Jun 2024 07:56 AM

வங்கதேசத்துடன் இன்று மோதல்: அரை இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா | T20 WC

ஆன்டிகுவா: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில்இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு வங்கதேச அணியுடன் மோதுகிறது.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில்இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரை உள்ளடக்கிய டாப் ஆர்டர் பேட்டிங் பெரிய அளவில் ரன்கள் குவிக்காத நிலையில் சூர்யகுமார் யாதவ் (53), ஹர்திக் பாண்டியா (32) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால் 181 ரன்கள் குவிக்க முடிந்தது.

நடுவரிசை பேட்டிங்கில் ஷிவம் துபே 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சுழற்பந்து வீச்சில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடிய அவர், ரஷித் கான் பந்தில் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்திருந்தார். லீக் சுற்றிலும் ஒரு ஆட்டத்தில் மட்டுமே 30 ரன்களை எட்டியிருந்தார் ஷிவம் துபே. அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் அவர், களமிறங்குகிறார்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரை இறுதிசுற்றுக்கு தகுதி பெறும். இதனால் தொடக்க வீரர்களான விராட் கோலி,ரோஹித் சர்மா கூட்டணி மட்டை சுழற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரீத் பும்ரா தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறார். நேர்த்தியாக செயல்படும் அவர், வங்கதேச அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், முதன் முறையாக இந்த தொடரில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 விக்கெட்கள் வீழ்த்திய அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன்வெளிப்படக்கூடும். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் சுழலில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருந்தது. இதனால் அந்த அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. இந்த தொடர் முழுவதுமே அந்த அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது.

அணியில் பவர் ஹிட்டர்கள் இல்லாதது பெரிய பின்னடைவாக உள்ளது. தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், தன்ஸித் கான் ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழப்பது நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு கடும் அழுத்தத்தை உருவாக்குவதாக உள்ளது. எனினும் கடந்த ஆட்டத்தில் கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 41 ரன்களும், தவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்களும் சேர்த்தது நம்பிக்கையை அளிக்கக்கூடும்.

எனினும் வங்கதேச அணியின் பேட்டிங் வரிசை ஜஸ்பிரீம் பும்ராவின் பந்து வீச்சை சமாளிப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டியது அவசியம். ஏனெனில் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பும்ரா, இந்தத் தொடரில் இதுவரை ஓவருக்கு சராசரியாக 3.46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். பந்து வீச்சை பொறுத்தவரையில் முஸ்டாபிஸுர் ரஹ்மான், ரிஷாத் ஹோசைன் ஆகியோர் இந்திய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

மே.இ.தீவுகள் - அமெரிக்கா மோதல்: முன்னதாக காலை 6 மணிக்கு பிரிட்ஜ் டவுனில் நடைபெறும் சூப்பர்8 சுற்று ஆட்டத்தில் மேற்கு இந்தியத்தீவுகள் - அமெரிக்கா அணிகள்மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கின்றன. மேற்கு இந்தியத் தீவுகள் அணிநடப்பு சாம்பியனான இங்கிலாந்திடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் அமெரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றிருந்தது. இன்றையஆட்டத்தில் தோல்வி அடையும் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x