Published : 23 May 2018 06:29 PM
Last Updated : 23 May 2018 06:29 PM

படகில் உலகைச் சுற்றி வந்த கடற்படை வீராங்கனைகள்; 8 மாத சாகசப் பயணம்: பிரதமர் மோடி பாராட்டு

படகில் உலகைச் சுற்றி வந்து சாகசப் பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படையின் 6 வீராங்கனைகளையும் பிரதமர் மோடி நேரில் வரவழைத்து பாராட்டினார்.

தளபதி வர்திகா ஜோஷி தலைமையில் இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றும் பிரதிபா ஜம்வால், ஸ்வாதி, ஐஸ்வரியா போடாபதி, விஜய தேவி மற்றும் பாயல் குப்தா ஆகியோர் மரப்படகில் உலகைச் சுற்றிவர திட்டமிட்டனர்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான தாரிணி என்ற படகில் கடந்த செப்டம்பர் மாதம் பயணத்தை தொடங்கிய இவர்கள், தற்போது உலகைச் சுற்றி வந்து வெற்றிகரமாக தங்கள் சாகசப் பயணத்தை முடித்துள்ளனர்.

மொத்தம், 4 கண்டங்களை தாண்டி, அட்லாண்டிக், பசுபிக், இந்திய பெருங்கடல்கள் வழியாக பயணம் மேற்கொண்டனர். 8 மாதங்களில் பயணத்தை நிறைவு செய்துள்ளனர். எரிபொருள் நிரப்புவது, உணவு தேவை, இளைப்பாறுவது போன்றவற்றிக்காக 5 நாடுகளில் மட்டும் தங்கள் படகை நிறுத்தினர்.

வெற்றிகரமாக உலகை சுற்றி வந்து சாதனை படைத்த கடற்படை வீரங்கனை 5 பேரையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.

பயணத்தை முடித்த இவர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். கடற்படை வீராங்கனைகளை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். உலக நாடுகளிடையே இந்தியாவின் பெருமையை அவர்கள் உயர்த்தி இருப்பதாக மோடி புகழாரம் சூட்டினார்.

கடல் பயணத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, அவர்கள் பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர்.

‘நவிகா சாகர் பரிக்கிரமா’ என பெயரிடப்பட்ட இந்த கடல் சாகசப் பயணம் முழுக்க முழுக்க இந்திய பெண்களால் மேற்கொள்ளப்பட்ட முதல் சாதனை பயணமாகும். இதன் மூலம் இந்திய கடற்படை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x