

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறை சென்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் இன்று விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவை தேர்தலை முன்னிட்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இறுதிக் கட்ட தேர்தல் முடிவடைந்ததும் அவர் திகார் சிறையில் மீண்டும் ஆஜரானார்.
இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது வழக்கறிஞர் வாதிட்டதாவது:
மதுபான கொள்கை ஊழல்வழக்கில் அப்ரூவர் ஆனவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அர்விந்த் கேஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்தது. தெலங்கானாவைச் சேர்ந்த சவுத் குரூப்பிடம் இருந்து ரூ.100 கோடி வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.இதனால் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று இரவு 8 மணிக்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் சிறைத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.