

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு நாடு முழுவதும் முழுமையாக தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் சுனில் ராஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. புகையிலைப் பொருட்களால் பாதிக்கப்படுவோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு நாடு முழுவதும் முழுமையாக தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆதித்யா அகர்வால் ஆஜராகி வாதிட்டார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் பொது இடங்கள், கல்வி மையங்கள் அருகே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.