‘Cancel NEET too’ - நெட் தேர்வு ரத்தான நிலையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: புதன்கிழமை இரவு ‘யுஜிசி நெட்’ (ஜூன் 2024) தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து வந்த தகவலை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடந்த பல்வேறு முறைகேடு காரணமாக மறுதேர்வு நடத்த வேண்டும் என சொல்லி தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வினாத்தாள் கசிவு, கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போன்றவற்றையும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக தேர்வர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கருணை அடிப்படையில் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாகவும். அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இந்த மறுதேர்வை விருப்பம் உள்ள மாணவர்கள் எழுதலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் தேர்வில் எடுத்த அசல் மதிப்பெண்களுடன் (கருணை மதிப்பெண் நீங்கலாக) கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) அன்று தேசிய அளவில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்கான தேசிய தேர்வு முகமை நடத்தப்பட்ட ‘யுஜிசி - நெட்’ தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதன்கிழமை இரவு மத்திய அரசு அறிவித்தது. இது அந்த தேர்வினை எழுதிய தேர்வர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நீட் தேர்வையும் ரத்து செய்க - எதிர்க்கட்சிகள் குரல்: "பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நிறைய கலந்துரையாடி வருகிறார். அவர் எப்போது ‘நீட் பே சார்ச்சா’ குறித்து பேசுவார்? யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது லட்ச கணக்கான மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி. இது மோடி அரசின் தோல்வியை சுட்டுகிறது.

நீட் வினாத்தாள் எங்கும் கசியவில்லை என மத்திய கல்வி அமைச்சர் முதலில் தெரிவித்தார். ஆனால், அது தொடர்பாக குஜராத், பிஹார் மற்றும் ஹரியாணாவில் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அது குறித்து அவர் ஒப்புக்கொண்டார். எப்போது நீட் தேர்வை ரத்து செய்வீர்கள்" என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இதனை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

"பாஜக அரசின் மெத்தனப் போக்கு இளைஞர்களை வஞ்சிக்கிறது. முதலில் நீட் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக சொல்லப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நெட் தேர்வு தற்போது முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பினை மத்திய கல்வி அமைச்சர் ஏற்பாரா?" என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

"நீட்ட தேர்வையும் ரத்து செய்க. நியாயமற்ற முறையில் அது நடத்தப்பட்டது" என காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

பாஜக ஆட்சியில் நடத்தப்படும் தேர்வில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு போன்றவை நடந்த வண்ணம் உள்ளன. இந்த அரசு நாட்டின் எதிர்காலத்துக்கு கேடு விளைவித்து வருகிறது. அதன் மூலம் மாணவர்களை விரக்தியில் ஆழ்த்தி வருகிறது என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in