நீட் தேர்வில் 0.001 சதவீதம்கூட அலட்சியம் இருக்க கூடாது: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

நீட் தேர்வில் 0.001 சதவீதம்கூட அலட்சியம் இருக்க கூடாது: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
Updated on
2 min read

புதுடெல்லி: நீட் தேர்வில் 0.001% அலட்சியம் இருந்தால்கூட அதை ஒப்புக்கொண்டு அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பாக மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.பாட்டி அடங்கிய விடுமுறைக் கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு மற்றும் என்டிஏ சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் 0.001% அலட்சியத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. இதை மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். தவறு நடந்திருந்தால், ‘ஆம் தவறு இருக்கிறது’ என்பதை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டு, ‘நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை இதுதான்’ என்பதை தைரியமாக தெரிவிக்க வேண்டும். அதுதான் குறைந்தபட்சம் உங்கள் செயல்திறனில் நம்பிக்கையை தூண்டும்.

நுழைவுத் தேர்வில் தவறு நடந்திருந்தால், அதை வெளிப்படை தன்மையுடன் ஒப்புக்கொண்டு, அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட ஒத்துழைக்க வேண்டும்.

நீட் தேர்வு மீதான மாணவர்களின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. நீட் தேர்வர்கள், கல்வியாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்களை மத்திய அரசும், தேர்வு முகமையும் விரோதப் போக்குடன் பார்க்க கூடாது. இந்த சமூகத்தில் ஒருவர் மோசடி செய்து மருத்துவரானால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அது, சமூகத்துக்கு பெரும் தீங்குகளை விளைவிக்கும்.

நீட் போன்ற பெரிய தேர்வுகளுக்கு தயாராகும் லட்சக்கணக்கான குழந்தைகளின் உழைப்பையும், நேர்மையான முயற்சிகளையும் யாரும் மறக்க கூடாது. இதுபோன்ற மோசடிகள் அவர்களது உண்மையான லட்சியங்களை முறியடித்துவிடும்.

என்ன தவறு நடந்துள்ளது என்பதை, நேர்மையான விசாரணை மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்.

நீட் முறைகேடு வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும். அதற்கான நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

மேலும், தேர்வை புதிதாக நடத்த உத்தரவிடக் கோரியது உட்பட நீட் தேர்வின் பல்வேறு குளறுபடிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு: இதற்கிடையே, பிரதமர் மோடி வழக்கம்போல நீட் பிரச்சினையிலும் மவுனம் சாதித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வு முறைகேடுகளால்24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆனாலும்கூட, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வழக்கம்போல மவுனம் சாதிக்கிறார்.

நீட் தேர்வு செயல்பாட்டில் திட்டமிட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழல் நடந்துள்ளது என்பதை, பிஹார், குஜராத், ஹரியாணாவில் நடந்த கைது நடவடிக்கைகள் தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள்தான் வினாத்தாள் கசிவின் மையமாக இருந்துள்ளன.

இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in