

வாராணசி: உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாராணசிக்கு பிரதமர் மோடி இன்று வருகிறார். அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்யும் அவர், விவ சாயிகளை சந்தித்து பேசி, ‘பிஎம். கிசான் நிதி’ ரூ.20,000 கோடியை வழங்க உள்ளார். பிரதமர் வருகையால் வாராணசியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். மத்தியில் கூட்டணி பலத்துடன் 3-வது முறையாக கடந்த 9-ம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மோடி, தான் வெற்றி பெற்ற வாராணசிக்கு இன்று வருகிறார்.
மாலை 4 மணிக்கு பபட்பூரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமானநிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து கார் மூலம் வாராணசி வருகிறார். அங்குள்ள விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். பின்னர், அங்கு நடைபெறும் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து, விவசாயிகளை சந்தித்து உரையாடு கிறார்.
அப்போது, ‘பிஎம் கிசான்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 9.26 கோடி விவசாயிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணையாக அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
மேலும், விவசாய பணிகளில் உதவி செய்வதற்காக சுயஉதவி குழுக்களை சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ட்ரோன்கள் மூலம் விவசாய நிலங்களில் மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் அளிக்கப்பட்டுள்ளன. இவர்கள் ‘கிரிஷி சக்திகள்’ என அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி சான்றிதழ்களை வழங்க உள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் குஜராத், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 90,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை மாவட்ட அதிகாரிகள் முழு வீச்சில் செய்து வருகின்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு வாராணசி யில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.