

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிக்னல் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது, பின்னால் வந்த சரக்கு ரயில் பலத்த வேகத்தில் மோதியதில் பல பெட்டிகள் தடம்புரண்டன. இந்த பயங்கர விபத்தில் சரக்கு ரயிலின் லோகோ பைலட், அவரது உதவியாளர், எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து அசாம் வழியாக மேற்கு வங்கத்தின் சீல்டா நகருக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று காலை 9 மணி அளவில் மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ரங்கப்பானி ரயில் நிலையம் அருகே நின்றிருந்தது.
அப்போது, அதே வழித்தடத்தில் பின்னால் வந்த ஒரு சரக்கு ரயில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்பகுதியில் அதிவேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில், கடைசி பெட்டியின் அடிப்பகுதிக்குள் சரக்கு ரயிலின் இன்ஜின் புகுந்தது. இதனால், அந்த பெட்டி பல அடி உயரத்துக்கு மேலே எழுந்தது. மேலும், எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பார்சல் பெட்டிகளும், ஒரு பயணிகள் பெட்டியும் தடம்புரண்டு கவிழ்ந்தன.
இந்த வழித்தடத்தில் ரானிபத்ரா - சத்தார்ஹட் நிலையங்களுக்கு இடையே தானியங்கி சிக்னல் பழுதடைந்ததால், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ், வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரங்கப்பானி ரயில் நிலையத்தில் காலை 8.42மணிக்கு புறப்பட்ட சரக்கு ரயில், இதை கவனிக்காமல் வந்ததால், நிறுத்தி வைக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் மீது மோதியுள்ளது என ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.
உள்ளூர் மக்கள் உதவியுடன் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில்ஈடுபட்டனர். இந்த விபத்தில் சரக்கு ரயிலின் லோகோ பைலட், அவரது உதவியாளர், எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிய 033-2350-8794, 033-238-33326 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மற்ற பயணிகள் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலாசூர் அருகே சரக்கு ரயில் மற்றும் ஒரு பயணிகள் ரயிலுடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 296 பயணிகள் உயிரிழந்தனர். 1,200 பேர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து, ரயில்வே துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தநிலையில் அதேபோன்ற விபத்து மீண்டும் நிகழ்ந்துள்ளது.
‘கவச்’ பாதுகாப்பு அம்சம் இல்லை: இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் பயணித்தால் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் தடுக்கும் தொழில்நுட்பம் ‘கவச்’ (Kavach) எனப்படுகிறது. நேற்று விபத்து நிகழ்ந்த பகுதியில் இந்த பாதுகாப்பு அம்சம் இல்லை.
இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் ஜெயவர்மா சின்ஹா நேற்று கூறியதாவது: சரக்கு ரயிலை ஓட்டுநர் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், சிக்னலை புறக்கணித்து, பின்பக்கத்தில் இருந்து கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இது மனித பிழையாக தெரிகிறது. விசாரணைக்கு பிறகே உறுதியாக தெரியவரும்.
2025-ம் ஆண்டுக்குள் 6,000 கி.மீ.க்குமேல் ரயில் பாதையில் கவச் தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதன்படி, டெல்லி - குவாஹாட்டி வழித்தடத்தில் கவச் பாதுகாப்பு சாதனங்களை நிறுவ ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் கவச் மூலம் பாதுகாக்கப்படும் 3,000 கி.மீ. தொலைவு ரயில் பாதையில் மேற்கு வங்கமும் இடம்பெறுகிறது. டெல்லி - ஹவுரா வழித்தடத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்’’ என்றார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து மிகுந்த வருத்தம் அளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. ரயிவ்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து பகுதிக்கு விரைந்துள்ளார்” என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ரயில் விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலும், வேதனையும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிவாரணம்: ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். இதற்கிடையே, ‘கவச்’ தொழில்நுட்பம் குறித்து அவர் ஏற்கெனவே விளக்கம் அளித்த பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த 7 கோர விபத்துகள்
2023 ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில் மோதிக் கொண்ட விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2016 உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 150 பயணிகள் உயிரிழந்தனர்.
2010 மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் மீது ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 146 பேர் கொல்லப் பட்டனர்.
2002 கொல்கத்தா-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தாபி ஆற்றில் மூழ்கியதில் குறைந்தது 120 பேர் உயிரிழந்தனர்.
1999 மேற்கு வங்கத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 285 பேர் உயிரிழந்தனர்.
1998 பஞ்சாபில் தடம் புரண்ட ரயில் மீது சீல்டா எக்ஸ்பிரஸ் மோதியதில் 210 பேர் இறந்தனர்.
1995 ஆக்ரா அருகே பெரோசாபாத்தில் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மீது காளிந்தி எக்ஸ்பிரஸ் மோதியதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்