Published : 18 Jun 2024 06:15 AM
Last Updated : 18 Jun 2024 06:15 AM
புதுடெல்லி: டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் சமீபத்தில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இவிஎம் இயந்திரங்களில் மனிதர்களாலோ அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலமோ ஊடுருவும் (ஹேக்) அபாயம் உள்ளது. எனவே, இவிஎம் இயந்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டும் ’ என்று கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பொதுப்படியாக எலான் மஸ்க் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. எலான் மஸ்க் கூறிய கருத்து அமெரிக்கா அல்லது மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனெனில், அந்த நாடுகளில் இன்டர்நெட் இணைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கருத்து இந்தியாவுக்குப் பொருந்தாது. ஏனெனில், இந்திய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை. பாதுகாப் பானது. எந்த நெட்வொர்க் குடனும் இணைக்கப்படாமல் தனித்து இயங்கக் கூடியது.
இந்திய இவிஎம் இயந்திரங்கள் வேறு ஒரு இயந்திரங்களுடன் இணைக்கப்படவில்லை. இதில் புளூடூத் வசதி இல்லை, வை-பை இல்லை, இன்டர்நெட் இல்லை. இதில் ஊடுருவ வாய்ப்பு என்று கூறுவதற்கு ஒரு வழியும் இல்லை’’ என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இவிஎம் இயந் திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று சாம் பிட்ரோடா கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் சாம் பிட்ரோடா. இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், தென் பகுதியில் இருப்பவர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் இருக்கிறார்கள்’’ என்று இவர் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து கடந்த மாதம் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘கடந்த 60 ஆண்டுகளாக மின்னணு, தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, சாப்ட்வேர், சிக்கலான தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் அதிகமாக பணியாற்றி வருகிறேன். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து மிக கவனமாக ஆய்வு செய்துள்ளேன். அதன்படி, அந்த இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று நம்புகிறேன். எனவே, பழைய வாக்குச் சீட்டு முறையை கொண்டு வருவதுதான் சிறந்த அணுகுமுறையாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று கூறும்போது, ‘‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை (இவிஎம்) கடவுள் என்றோ, சாத்தான் என்றோ கூறத் தேவையில்லை. அதே நேரத்தில், இவிஎம் இயந்திரங்கள் பல முறை அக்னி பரீட்சையை தாண்டி வந்துள்ளன. அதில் வெற்றியும் பெற்றுள்ளன. முன்பெல்லாம் இவிஎம் இயந்திரங்களை உள்நாட்டில் மட்டுமே எதிர்த்து வந்தனர். தற்போது சர்வதேச கூலிப்படையினர் அதற்கு எதிராக கிளம்பி உள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
இவிஎம் இயந்திரங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த எலான் மஸ்க் பெயரை கூறாமல் முக்தார் அப்பாஸ் நக்வி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT