

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த 54 வயது பெண்மணி கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தனது 17 வயது மகளுக்கு உதவி செய்யுமாறு எடியூரப்பாவை சந்தித்து உதவி கேட்டேன். அப்போது அவர் என் மகளை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சதாசிவ நகர்போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் இந்தியதண்டனை சட்டத்தின் 354 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த மே 25-ம்தேதி இவ்வழக்கின் புகார்தாரர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் கோரினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை ஏற்காமல், உடனடியாக உடலை எரியூட்ட அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வுபிரிவு போலீஸார் (சிஐடி) ஜூன் 12-ம்தேதி ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகாததால் பெங்களூரு விரைவு நீதிமன்றம், ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதை எதிர்த்து எடியூரப்பா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது நீதிமன்றம் அவர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ததுடன், ஜூன் 17-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து எடியூரப்பா நேற்று காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அலுவலகத்துக்கு வந்தார்.
10.50 மணிக்கு எடியூரப்பாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது புகார்தாரரின் குற்றச்சாட்டுகள், அவர் தாக்கல் செய்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் அதில் இடம்பெற்ற குரல் பதிவு, புகார்தாரருடனான தொலைபேசி உரையாடல் ஆகியவை குறித்து விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் மூன்றரை மணி நேர விசாரணைக்கு பின்னர் எடியூரப்பா 2.30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது எடியூரப்பா, ‘‘விசாரணைக்கு நான் ஒருபோதும் அஞ்சியதில்லை. இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். உண்மை யார் பக்கம் இருக்கிறது என மக்கள் அறிவார்கள்'' என தெரிவித்தார்.