

புதுடெல்லி: ஏனைய கட்சிகளைப் போன்று, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளையும்மோடியும், அமித் ஷாவும் சேர்ந்து உடைப்பார்கள் என்று சிவசேனா (உத்தவ் பாலசாஹேப் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களி டம் அவர் மேலும் கூறியதாவது: நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான இந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014 மற்றும் 2019-ம் ஆண்டைப் போலல்லாமல் நிலையற்றதாகவே இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம், மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியையும் விரைவில் உடைப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) இதனை ஒரு எச்சரிக்கையாகவே தெரிவிக்கிறேன். என்டிஏ கூட்டணிவேட்பாளருக்கு மக்களவை சபாநாயகர் பதவி கிடைக்காவிட்டால் இதனை அவர்கள் நிச்சயம் செய்து முடிப்பார்கள். பாஜகவின் தந்திரங்களை உணர்ந்தவன் என்ற அடிப்படையில்தான் நான் இதை கூறுகிறேன்.
சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு சபாநாயகர் பதவி கிடைத்தால் அதை நாங்கள் வரவேற்போம். நிலைமை மாறினால், இந்தியா கூட்டணி மக்களவையில் தங்களது பலத்தை வெளிப்படுத்தும். ஒட்டுமொத்த இந்தியா கூட்டணி கட்சிகளும் ஒன்றுகூடி விவாதித்து சந்திரபாபுவின் பின்னால் நிற்கும்.
ஆர்எஸ்எஸுக்கு பங்கு: மணிப்பூரில் நிலைமை குறித்து ஆர்எஸ்எஸ் செய்த விமர்சனம் வரவேற்கத்தக்கது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் மோடி, அமித் ஷா ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் பாதிப் பங்கு உண்டு என்பதை ஆர்எஸ்எஸ் திறந்த மனதுடன் ஒப்புக் கொண்டுள்ளது. அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள விரும்பினால் அதுவே நல்ல விஷயம். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.