Published : 17 Jun 2024 05:27 AM
Last Updated : 17 Jun 2024 05:27 AM
புதுடெல்லி: பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 9.26 கோடி விவசாயிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி நாளை (18-ம் தேதி) வழங்குகிறார்.
மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி, தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். அதன்பின் அவர் முதல் கையெழுத்தாக பிஎம்-கிஷான் திட்டத்தின் 17-வது தவணையை விடுவிக்கும் கோப்பில் கையெழுத் திட்டார்.
இத்திட்டத்தின் கீழ் விவசாயி கள் விவசாய பணியை மேற் கொள்ள ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணையாக அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
பிரதமர் மோடி நாளை மாலை தனது சொந்த தொகுதியான வாராணசிக்கு நாளை மறுநாள் செல்கிறார். இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பி.எம் கிஷான் திட்டத்தின் 17-வது தவணைத் தொகை ரூ.20,000 கோடியை பிரதமர் விடுவிக்கிறார். இதன் மூலம் நாட்டில் உள்ள 9.26 கோடி விவசாயிகள் பயனடைவர்.
மேலும் விவசாய பணிகளில் உதவி செய்வதற்காக சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு டிரோன்கள் மூலம் விவசாய நிலங்களில் மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் அளிக்கப்பட்டுள்ளன. இவர்கள் ‘கிரிஷி சக்திகள்’ என அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி சான்றிதழ்களை வழங்குகிறார். இத்திட்டத்தின் கீழ் குஜராத், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திர பிரதேசம், மற்றும் மேகாலயாவில் மொத்தம் 90,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இது குறித்து மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:
பிரதமர் மோடியின் கடந்த 2 ஆட்சியில் வேளாண்மைக்கு முக்கியம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக பல முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார். பிஎம்-கிஷான் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை நாட்டில் உள்ள 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3.04 லட்சம் கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் விவசாய மேம்பாட்டுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும், 100 நாள் திட்டத்தை மத்திய அரசு தயாரித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT