

விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
காந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து விமான கடத்தல் தடுப்புச் சட்டம் 1982-ஐ திருத்த முடிவு செய்யப்பட்டது. நீண்ட தாமதத்துக்குப் பிறகு 2010-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதா 2010 ஆகஸ்டில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு போக்குவரத்துத் துறை சார்ந்த நிலைக்குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின்னர் மசோதா அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இந்நிலையில் ஐ.நா. சபையின் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் பெய்ஜிங் பிரகடனத்தின்படி விமான கடத்தல் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் தற்கொலைப் படை தாக்குதல் சதித் திட்டத்தோடு வரும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் மசோதாவில் வழிவகை செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.