

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த கண்ணனை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டபோது அவர் பிராமணர் என்று கூறி திமுக எதிர்ப்பு தெரிவித்ததாக பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ குற்றம் சாட்டி உள்ளார்.
நீதிபதி அசோக் குமாரின் பதவி நீட்டிப்புக்கு அரசியல் கட்சி சார்பில் நெருக்கடி தரப்பட்டது என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்திருந்தார். இப் போது திமுக மீது புதிய புகாரை சுமத்தியுள்ளார். அதன் விவரம்:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த கண்ணனை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று மூத்த நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ அதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அப்போது கண்ணன் பிராமணர் என்று கூறி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த கட்சி (திமுக) சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எனினும், கண்ணன் நீதிபதியாக நியமிக்கப்பட்டாலும், மத்திய அரசுக்கு அக்கட்சி நெருக்கடி அளித்ததால் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். சென்னையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் நீதிபதியாக நியமிக்கப்படும் போது, சென்னை உயர்நீதி மன்றத்தில் நியமிக்கப்படுவது தான் முறை.
ஒரு அரசியல் கட்சியின் நெருக்கடிக்குப் பணிந்து, நற்பெயருடன் இருந்த கண்ணன் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அரசியல் நெருக்கடிகளுக்கு ‘கொலீஜியம்’ வளைந்து கொடுக்கிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம். இவ்வாறு மார்கண் டேய கட்ஜூ கூறியுள்ளார்.