Published : 16 Jun 2024 05:00 AM
Last Updated : 16 Jun 2024 05:00 AM

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை: மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, சென்னைக்கு வரவுள்ள நிலையில், அவர் என்னென்ன ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார் என்பது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விளக்கி உள்ளனர்.

நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றபிறகு, சென்னைக்கு முதல் முறையாக வரும் 20-ம் தேதி வருகை தரஉள்ளார். சென்னையில் வந்தேபாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இங்கு சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பேசின்பாலம் யார்டில் வந்தே பாரத் ரயில் பராமரிப்புக்காக, பணிமனையை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம் - திருநெல்வேலி இடையே நிறைவடைந்த இரட்டைப்பாதை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதுதவிர, நாகர்கோவில் டவுன் - நாகர்கோவில் சந்திப்பு - கன்னியாகுமரி இடையே முடிக்கப்பட்ட இரட்டைப்பாதை திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவைகளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

தொடர்ந்து, மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைக்கிறார். இதுபோல, மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டாலும், இந்த ரயிலின் வழக்கமான சேவைசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

கண்காணிப்பு தீவிரம்: பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தரவுள்ள நிலையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, ரயில்வே பாதுகாப்பு படையினரின் (ஆர்.பி.எஃப்) கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.எஃப் வீரர்களின் விடுமுறையை கட்டுப்படுத்தவும், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ விடுப்பில் இருப்பவர்களை தவிர, அனைத்து வீரர்களும் பணிக்கு வரவும் ஆர்.பி.எஃப் முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x