Published : 31 May 2018 08:28 AM
Last Updated : 31 May 2018 08:28 AM

ஒடிஸா மாநிலத்தில் ஏழை குழந்தைகளுக்கு சொந்த பள்ளியில் இலவச கல்வி: ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டியதால் டீக்கடைக்காரர் நெகிழ்ச்சி

ஏழைக் குழந்தைகளுக்கு தனது பள்ளியில் இலவசக் கல்வி அளித்து வரும் ஒடிஸா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த டீக்கடைக்காரர் டி. பிரகாஷ் ராவை, பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்..

கட்டாக் நகரில் தேநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார் பிரகாஷ் ராவ்(வயது 60). இவர் இங்கு குடிசைப் பகுதிகளில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு கல்விச் சேவையை நீண்ட நாட்களாக அளித்து வருகிறார்.

இதற்காக அவரே ஆஷா அஸ்வாசன் என்ற பள்ளியையும் சொந்தமாக நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் தற்போது 75 குழந்தைகளுக்கும் மேல் படித்து வருகிறார்கள். இதுகுறித்து பிரகாஷ் ராவ் கூறும்போது, “குடிசைப் பகுதி மக்களின் குழந்தைகளுக்கு கல்விச் சேவை தரவேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக நான் பல முயற்சிகளைச் செய்தேன். இங்குள்ள குடிசைப் பகுதிகளில் தேடியலைந்து குழந்தைகளை எனது பள்ளிக்கு அழைத்து வந்தேன். இந்த குழந்தைகளின் பெற்றோருக்கு கல்வியறிவும் இல்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. என்னுடைய முயற்சியால் அவர்கள் இன்று கல்வி பயின்று வருகின்றனர். இப்போது அந்தப் பெற்றோர் என் காலைத் தொட்டு வணங்குகின்றனர்.

மேலும் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்வேன். இதுவரை 217 முறை ரத்த தானம் செய்துள்ளேன்.

எனக்கு தேநீர் கடையில் தினந்தோறும் ரூ.600-க்கும் மேல் வருமானம் கிடைக்கிறது. இதனால் பள்ளியை நடத்துவது எனக்கு சிரமமான விஷயமாக இல்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி கட்டாக் நகருக்கு வருகை தந்தார். அப்போது அவரது அலுவலகத்திலிருந்து எனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. பிரதமரை வந்து சந்திக்குமாறு அதிகாரிகள், என்னைக் கேட்டுக் கொண்டனர். பள்ளியைச் சேர்ந்த 20 குழந்தைகளுடன் நான் பிரதமரைச் சந்தித்தேன். அப்போது என்னைப் பார்த்த பிரதமர் மோடி, ராவ் அவர்களே, நான் உங்களைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன். உங்களைப் பற்றி எனக்கு அனைத்தும் தெரியும். யாரும் உங்களைப் பற்றி எனக்கு இங்கு சொல்லத் தேவையில்லை. உங்களது முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.

எங்களுடன் அவர் சுமார் 18 நிமிடம் பேசினார். அதற்கு அடுத்த நாளே மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னைப் பற்றி பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். அந்த தருணம் எங்களால் மறக்க முடியாது. விரைவில் எனது பள்ளிக்கு வருகை தந்து, குழந்தைகளுடன் உணவருந்துவதாக மோடி உறுதி அளித்துள்ளார். அவருக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று உற்சாகத்துடன் ராவ் தெரிவித்தார். - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x