மீண்டும் நியமிக்கப்பட்ட அஜித் தோவல், பி.கே.மிஸ்ரா- யார் இவர்கள்?

மீண்டும் நியமிக்கப்பட்ட அஜித் தோவல், பி.கே.மிஸ்ரா- யார் இவர்கள்?
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும் பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

உளவு நடவடிக்கைகளில் மிகத் திறமையானவராக கருதப்படும் அஜித் தோவல், 1968-ம்ஆண்டின் ஐபிஎஸ் அதிகாரி. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற பின்பு இவர் கடந்த மே 2014-ல் மோடி முதன்முறையாக பதவியேற்றபோது இப்பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது முதல் பிரதமர் மோடியுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறார்.

வெளியுறவுப் பாதுகாப்பு நிபுணரான தோவல்,தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் திறமை மிக்கவராக அறியப்படுகிறார். இவருக்கு முன்பாக, அப்பதவியில் சிவசங்கர் மேனன் இருந்தார். இந்திய ராணுவத்தின் உயரிய விருதான கீர்த்திசக்ராவை பெற்ற அதிகாரி தோவல்.பிரதமர்மோடியின் ஆட்சியில் தோவல், பாராட்டுக்குரிய பல முக்கியப் பணிகளை செய்திருந்தார். 2014 ஜூலையில் ஈராக்கின் டிக்ரியிலுள்ள மருத்துவமனையில் சிக்கிய இந்தியவின் 46 செவிலியர்களை மீட்டதில் முக்கியப் பங்காற்றினார். இதற்காக, 2014 ஜுன் 25-ல் ஈராக்கிற்கு அவர் ரகசியப் பயணம் மேற்கொண்டார். டிக்ரியில் நிலவிய சூழலை கணித்து அவர் எடுத்த முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது.

அடுத்து 2016 செப்டம்பரில் பாகிஸ்தானில் புகுந்து இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலின் பின்னணியிலும் அஜித் தோவலின் பங்கு அதிகம் இருந்தது. இதேபோல், தோவலின் மேற்பார்வையில்தான் பாகிஸ்தானின் எல்லையிலுள்ள பாலாகோட்டிலும் 2019 பிப்ரவரியில் இந்திய ராணுவம் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இத்துடன் வடகிழக்கு மாநிலங்களின் கிளர்ச்சியாளர்களை தொடர்ந்து ஒடுக்குவதிலும் தோவலின் பங்கு இன்றியமையாததாக கருதப்படுகிறது.

முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா: பிரதமரின் மற்றொரு நம்பிக்கைக்குரியவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர்.பிரமோத் குமார் மிஸ்ரா உள்ளார். பொருளாதாரத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 1972-ம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தேர்வானவர். குஜராத் மாநிலப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த 2019 -ல் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பி.கே.மிஸ்ரா, குஜராத்தில் முதல்வராக இருந்த மோடியின் நிர்வாகத்தில் 2001 முதல் 2004 வரை முதன்மை செயலாளராகப் பணி செய்தவர். இவரது பணியை பாராட்டி ஐக்கிய நாடுகள் சபை விருது வழங்கி கவுரவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in