Last Updated : 19 May, 2018 07:10 AM

 

Published : 19 May 2018 07:10 AM
Last Updated : 19 May 2018 07:10 AM

கர்நாடகா, தமிழகம் இடையேயான நதிநீர் பங்கீட்டு வழக்கில் ஜூன் மாதத்துக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவு: மத்திய அரசின் செயல்திட்ட வரைவு அறிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை வருகிற பருவ காலத்துக்கு முன்பாக (ஜூன் மாதத்துக்குள்) அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர் பங்கிட்டு வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007-ல் உத்தரவிட்டது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் வழங்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மேல்முறையீடு செய்தன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வழக்கின் விசாரணை தள்ளிக்கொண்டே போனது. இதனால் உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல், வழக்கை வாரத்தில் 3 நாட்கள் என விசாரிக்கத் தொடங்கியது. இதனால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு வேகமெடுத்தது.

இந்நிலையில் கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் சார்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. பின்னர் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தலைமை நீதிபதியை கொண்ட அமர்வு இறுதி தீர்ப்பை அளித்தது.

அப்போது, “தமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரின் அளவை 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சி ஆக குறைத்தது. கர்நாடகாவுக்கு 284.75 டிஎம்சி நீரும் கேரளாவுக்கு 30 டிஎம்சி நீரும் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஒரு செயல்திட்டத்தை (ஸ்கீம்) உருவாக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் மாத இறுதியுடன் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசு கர்நாடக தேர்தலை காரணம் காட்டி இழுத்தடித்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் முடிந்த பின்னர் அதாவது கடந்த 14-ம் தேதி மத்திய அரசு 14 பக்க செயல்திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய அரசுகள் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டன.

இந்நிலையில் கர்நாடகா அர சின் வழக்கறிஞர் ஷியாம் திவான், “கர்நாடகாவில் புதிய அரசு உருவாவதில் இழுபறி நீடிக்கிறது. எனவே வழக்கை ஜூலை முதல் வாரத்துக்கு தள்ளி வைக்க வேண் டும்” எனக் கோரினார்.

திருத்தப்பட்ட வரைவு அறிக்கை

இதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால், உச்ச நீதிமன்றம் கர்நாடகாவுக்கு கால அவகாசம் வழங்க மறுத்தது. 4 மாநில அரசுகள் மேற்கொண்ட திருத்தங்களை உள்ளடக்கி, மத்திய அரசு வரைவு அறிக்கையில் திருத்தம் செய்தது.

நேற்று முன்தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் மத்திய அரசு இறுதி திட்ட வரைவு அறிக்கையை தாக் கல் செய்தது.

பெயர் மாற்றம்

அதில், காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயர் காவிரி மேலாண்மை ஆணையம் என மாற்றப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. அதே போல நீர் பங்கீடு, ஆய்வுகள் மேற்கொள்வது, அணைகளை திறப்பது, இறுதி முடிவு எடுப்பது உள்ளிட்ட அதிகாரமும் ஆணையத்துக்கே அளிக்கப்பட்டது. இந்த வரைவு அறிக்கையில் தமிழக அரசு முன் வைத்த திருத்தங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதேவேளையில் கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகள் தெரிவித்த பரிந்துரைகளை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது. அதில், “காவிரி தீர்ப்பை செயல்படுத்தும் வரைவு அறிக்கையின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை வருகிற பருவ காலத்துக்குள் (ஜூன்) மத்திய அரசு அமைக்க வேண்டும். வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின்படி, புதிய அமைப்பு செயல்பட வேண்டும். இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இந்த காவிரி தீர்ப்பு செயல்திட்ட வரைவு அறிக்கை தொடர்பாக, மத்திய அரசு உடனடியாக‌ அரசிதழில் வெளியிட வேண்டும்” எனக்கூறி, காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தார்.

அனைத்து அதிகாரங்களும் ஆணையத்துக்கே..

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு. மத்திய அரசு இதில் தலையிட முடியாது. நீர் திறப்பில் பிரச்சினை ஏற்பட்டால் மாநிலங்கள் ஆணையத்தை அணுக வேண்டும். மாநிலங்கள் ஆணையத்தின் உத்தரவை மதிக்காத நிலையில், மத்திய அரசை அணுக வேண்டும்.

காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் கர்நாடகாவின் கட்டுப்பாட்டிலும் மேட்டூர், லோயர் பவானி, அமராவதி உள்ளிட்ட அணைகள் தமிழகத்தின் கட்டுப்பாட்டிலும் பனசுரசாகர் கேரளாவின் கட்டுப்பாட்டிலும் இருக்கும். அதே வேளையில் அணைகளில் இருந்து நீர் திறப்பு, நீர் இருப்பு மேலாண்மை, ஆய்வு மேற்கொள்ளுதல் போன்றவற்றை ஆணையம் மேற்கொள்ளும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியின்றி காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் புதிய அணைகள், தடுப்பணைகளை கர்நாடகாவும் தமிழகமும் கட்டக்கூடாது.

இந்த ஆணையத்தின் தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அல்லது அனுபவம் வாய்ந்த‌ தலைமை பொறியாளர் நியமிக்கப்படுவார். இதேபோல ஆணையத்தில் 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். 2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்கள், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பர். மத்திய அரசு தரப்பில் இருந்து ஒருவர் இடம் பெறுவார்.

ஆணையத்தின் செயல்பாட்டுக்கான ஆரம்ப கட்ட நிதியாக மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். பிறகு அனைத்து செலவுகளையும் கர்நாடகாவும் தமிழகமும் தலா 40%, கேரளா 15%, புதுச்சேரி 5% ஏற்க வேண்டும்

அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கண்காணித்து, நீர் திறந்து விடுவது, சேமிப்பது உள்ளிட்டவற்றை ஆணையம் கவனிக்கும். இதற்காக கர்நாடகா- தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் புதிதாக‌ அளவை நிலையம் அமைத்து கண்காணிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x