4 தீவிரவாதிகளின் வரைபடம்
4 தீவிரவாதிகளின் வரைபடம்

தோடா தாக்குதல்: 4 தீவிரவாதிகளின் படங்களை வெளியிட்ட ஜம்மு போலீஸார்

Published on

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் நடந்த இரண்டு பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை தோடா போலீஸார் புதன்கிழமை வெளியிட்டனர். மேலும், அவர்கள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று பதேர்வாவின் சட்டர்கல்லாவில் உள்ள 4 ராஷ்ட்ரிய ரைஃபில் மற்றும் போலீஸ் கூட்டுச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையிருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தது. இந்தத் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உட்பட 7 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பதேர்வா, தாத்ரி, காண்டோஹ் பகுதிகளின் மேல் பகுதியில் இருப்பதாக நம்பப்படும் நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை ஜம்மு காஷ்மீர் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

பயங்கரவாதம் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதேபோல், தீவிரவாதிகள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தத் தீவிரவாதிகளின் இருப்பு மற்றும் நடமாட்டம் பற்றிய தகவல் தெரிந்தால் அதனைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே ரெய்சி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதியின் வரைபடத்தையும் போலீஸார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். அவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகையும் அறிவித்திருந்தனர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஷிவ் கோரி கோயிலில் இருந்து கேத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தூப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in