39 சதவீத மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவை

39 சதவீத மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவை
Updated on
1 min read

புதுடெல்லி: புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவை யில் உள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடை பெற்ற விழாவில் 3-வது முறையாக பிரதமர் பதவியேற்றார் நரேந்திர மோடி. அவருடன் 71 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகள் விவரம் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சர்கள் 71 பேரில் 28 பேர் மீது ( 39 சதவீதம்) குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் 19 பேர் (27 சதவீதம்) மீது கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான கடும் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேற்கு வங்க எம்.பி.க்கள்: மேற்கு வங்க பாஜக எம்.பி. சாந்தனு தாக்குர், மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழித் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதேபோல் மற்றொரு மேற்கு வங்க பாஜக எம்.பி. சுகந்தா மஜும்தார் கல்வி மற்றும் வடகிழக்கு பிராந்திர மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரானார். இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் இவர்கள் மீதுள்ளன.

கேரளாவில் இருந்து பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.பி.யும் நடிகருமான சுரேஷ் கோபி உட்பட 5 பாஜக அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.பெட்ரோலியம், இயற்கை எரிவாயு,சுற்றுலா துறை இணை அமைச்சராக சுரேஷ் கோபி பொறுப்பேற்றுள்ளார். தவிர பண்டி சஞ்சய் குமார் மற்றும் ஜுவல் ஓரம் ஆகியோரும் இதில் அடங்குவர்.

வெறுப்புணர்வு பேச்சு தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரிராஜ் சிங் உட்பட 8 அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன. இவ்வாறு ஏடிஆர் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in