Published : 13 Jun 2024 05:39 AM
Last Updated : 13 Jun 2024 05:39 AM
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக மோகன் சரண் மாஜி (52) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 2 துணை முதல்வர்கள் மற்றும் 13 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒடிசாவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 74 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக 78 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால பிஜு ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆளும் பிஜு ஜனதா தளத்துக்கு 51, காங்கிரஸுக்கு 14, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி கிடைத்தன. மூன்று தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இந்த 3 பேரும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், பாஜக மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பூபேந்திர யாதவ் தலைமையில், அக்கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் புவனேஸ்வரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஒடிசாவின் புதிய முதல்வராக பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் ரகுவர் தாஸை சந்தித்த மோகன் மாஜி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இவரது கோரிக்கையை ஏற்ற ஆளுநர் ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் நேற்று மாலை 5 மணிக்கு பாஜக அரசின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரகுவர் தாஸ் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன் மூலம் ஒடிசாவின் முதல் பாஜக முதல்வர் என்ற பெருமை மோகன் மாஜிக்கு கிடைத்தது.
இவ்விழாவில் கே.வி.சிங் தியோ, பிரபதி பரிடா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மேலும் 8 கேபினட் அமைச்சர்கள் 5 இணையமைச்சர்கள் பதவி யேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, தொடர்ந்து 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கை நேற்றுகாலையில் சந்தித்த மோகன் மாஜி, தனது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
யார் இந்த மோகன்? - ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டம் ராய்கலா கிராமத்தில் கடந்த 1972-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி மோகன் மாஜி பிறந்தார். சந்தாலி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், இளங்கலை மற்றும் சட்டப் படிப்பு படித்துள்ளார். 1997 முதல் 2000 வரை கிராம பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளார்.
இவர் கடந்த 2000-வது ஆண்டு கேந்துஜார் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ-வாக தேர்வானார். இதையடுத்து, 2004-ல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும், 2009, 2014 தேர்தலில் தோல்வி அடைந்தார். 2019, 2024 (4-வது முறை) தேர்தலில் அதே தொகுதியில் வென்றார்.
ஒருபோதும் நினைக்கவில்லை: ஒடிசா முதல்வரின் மனைவி நெகிழ்ச்சி
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் மாஜி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த செய்தியை உள்ளூர் செய்திச் சேனலில் பார்த்த அவரது தாய், மனைவி மற்றும் 2 மகன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதுவரை மோகன் மாஜி முதல்வராவார் என அவரது குடும்பத்தினருக்கே தெரியாது.
இதுகுறித்து மோகன் மாஜியின் மனைவி பிரியங்கா கூறும்போது, “என் கணவர் ஒடிசா முதல்வராவார் என ஒருபோதும் நான் நினைத்ததே இல்லை. புதிய பாஜக அரசில் என் கணவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன். இந்நிலையில், அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என் கணவர் தனது சொந்த தொகுதிக்கும் மாநில மக்களுக்கும் நல்ல பணிகளை செய்வார் என நம்புகிறேன்” என்றார்.
மோகன் மாஜியின் தாய் பாலா மாஜி கூறும்போது, “என் மகன் இளைஞராக இருந்தபோதே மக்களுக்கு சேவை செய்ய முன்வந்தார். முதலில் அவர் கிராம பஞ்சாயத்து தலைவரானார். பிறகு எம்எல்ஏ-வானார். இப்போது முதல்வராகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். மோகன் மாஜி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டதும், அவருடைய சொந்த ஊரான ராய்கலாவில் (கியோஞ்சர் மாவட்டம்) உள்ள பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT