

அடுத்து வரவிருக்கும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என கட்சியினருக்கு பாஜகவின் புதிய தலைவர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக் கப்பட்டதற்கு முறைப்படி ஒப்புதல் அளித்தது. இக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், ஹரியாணா மற்றும் மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் பாஜக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
உபியில் அமைதி ஏற்பட வேண்டும்
உத்தரப்பிரதேச அரசு மதத்தை வைத்து அரசியல் நடத்தி மக்களைப் பிரிக்க முயல்கிறது. இதை அம்மாநில மக்களின் வீட்டு வாசல்களுக்கே சென்று பாஜகவினர் எடுத்துக் கூற வேண்டும். அங்கு அமைதியை ஏற்படுத்துவதில் மாநில அரசைவிட பாஜகவுக்கு அதிக பொறுப்பு உள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் சீமாந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வாக்குகளை வெற்றியாக நம்மால் மாற்ற முடியவில்லை. இனி கடினமாக உழைத்து இந்த வாக்குகளை தொகுதிகளின் வெற்றியாக மாற்ற வேண்டும். இதற்காக கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும். பாஜகவை விட புனித மான கட்சி வேறு எதுவும் இல்லை. சித்தாந்த அடிப்படையில் மற்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் வெற்றி கிடைத்தது.
லாலுவுடன் கைகோர்த்த நிதிஷ்
பஞ்சாயத்து தேர்தல்முதல் பாராளுமன்றத் தேர்தல்வரை பாஜக வெற்றி பெற வேண்டும். தேர்தல்களில் வெற்றிபெறும் பழக்கத்தை கட்சியின் நிர்வாகிகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸுடன் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர முயல்கின்றன.
உதாரணமாக, பிஹாரில் லாலுவின் காட்டு தர்பாரை எதிர்த்துப் போராடி ஆட்சியைப் பிடித்த நிதிஷ் குமார், மீண்டும் ஆட்சிக்காக லாலுவின் மடியிலேயே போய் அமர்ந்துகொண்டார். இதற்காக அவர் வெட்கப்படவில்லை. இதை மக்கள் முன்பு தோலுரித்துக் காட்ட பாஜகவினர் தயங்கக் கூடாது. அவர்களின் முகத்திரையைக் கிழித்து, பிஹாரில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க இப்போதே தயாராக வேண்டும் என அமித் ஷா பேசினார்