Published : 11 Jun 2024 08:07 PM
Last Updated : 11 Jun 2024 08:07 PM

மோடி 3.0 அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம்: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பதவி பெற்றுள்ள வாரிசுகளின் பெயர்களை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கட்சியில் தலைமுறைகளை கடந்து போராட்டம், சேவை, தியாகம் செய்தவர்களை வாரிசு அரசியல் என சொல்பவர்கள், அதிகாரத்தை வாரிசுகளுக்கு பகிர்ந்தளித்துள்ளனர். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு நரேந்திர மோடி என்னச் சொல்ல போகிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள வாரிசுகள்:

 • ஹெச்.டி.குமாரசாமி - முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன்.
 • ஜெயந்த் சவுத்ரி - முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரன்.
 • ராம்நாத் தாக்கூர் - பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் மகன்.
 • ராவ் இந்தர்ஜித் சிங் - ஹரியாணா முன்னாள் முதல்வர் ராவ் பிரேந்திர சிங்கின் மகன்.
 • ரவ்னீத் சிங் பிட்டு - பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன்.
 • ஜோதிராதித்ய சிந்தியா - முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியாவின் மகன்.
 • சிராக் பாஸ்வான் - முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன்.
 • ராம் மோகன் நாயுடு - முன்னாள் மத்திய அமைச்சர் யெரன் நாயுடுவின் மகன்.
 • பியூஷ். கோயல் - முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன்.
 • தர்மேந்திர பிரதான் - முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதானின் மகன்.
 • கிரண் ரிஜிஜு - அருணாச்சல்பிரதேசத்தின் முன்னாள் சபாநாயகர் ரிஞ்சின் காருவின் மகன்.
 • ஜே.பி. நட்டா - மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் எம்.பி மற்றும் அமைச்சர் ஜெய்ஸ்ரீ பானர்ஜியின் மருமகன்.
 • ஜிதின் பிரசாதா - உத்தரப் பிரதேச முன்னாள் எம்.பி. ஜிதேந்திர பிரசாதா மகன்.
 • கிர்த்தி வர்தன் சிங் - உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் மகாராஜ் ஆனந்த் சிங்கின் மகன்.
 • அனுப்ரியா படேல் - பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அப்னா தளம் நிறுவனர் சோனேலால் படேலின் மகள்.
 • ரக்‌ஷா கட்சே - மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவின் மருமகள்.
 • கமலேஷ் பாஸ்வான் - உத்தரப் பிரதேச மக்களவை வேட்பாளர் ஓம் பிரகாஷ் பாஸ்வானின் மகன் இவர்.
 • சாந்தனு தாக்குர் - மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாகூரின் மகன்.
 • வீரேந்திர குமார் காதிக் - மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சர் கௌரிசங்கர் ஷெஜ்வாரின் மைத்துனர்.
 • அன்னபூர்ணா தேவி - பிஹார் முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் பிரசாத் யாதவின் மனைவி.

ஓர் இஸ்லாமியரும் இல்லை: இதனிடையே, “புதிதாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் முகமும் இல்லை. இது உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உலகமே ஒரு குடும்பம் எனக் கூறக்கூடியவர்கள் நாம். நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியைக் கொண்டுள்ள ஒரு பிரிவினரை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைப்பது நாட்டின் மரியாதையை பாதிக்கும்” என்று உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நேற்று முன்தினம் பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் உள்ள 71 உறுப்பினர்களில் 5 பேர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் சீக்கியர்கள், இருவர் பவுத்தர்கள், ஒருவர் கிறிஸ்தவர் ஆவர். இந்த முறை தேர்தலில் மொத்தம்24 முஸ்லிம்கள் எம்.பி.க்களாக தேர்வாகினர். எனினும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிலும் முஸ்லிம் எம்.பி.க்கள்இல்லை. என்றாலும் பாஜகவின்முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் கூட இந்தமுறை அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x