Last Updated : 04 May, 2018 08:22 PM

 

Published : 04 May 2018 08:22 PM
Last Updated : 04 May 2018 08:22 PM

வெற்றிகரமானதா மூன்றாவது அணி?

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் மூன்றாவது அணி தொடர்பான பேச்சுகள் எழுவது வாடிக்கை. தற்போதும் மூன்றாவது அணிக்கான முஸ்தீபுகள் மாநிலக் கட்சிகளிடம் தொடங்கிவிட்டன. மூன்றாவது அணி என்பது இந்தியாவில் வெற்றிகரமான அணியாக எப்போதெல்லாம் வலம் வந்திருக்கிறது?

தேசிய முன்னணி

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக பிற தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் சேர்ந்து அமைக்கும் கூட்டணியே மூன்றாவது அணி என்று உருவகப்படுத்தப்படுகிறது. ஆனால், இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரே ஒரு முறைதான் மூன்றாவது அணி வெற்றிகரமாக உருவாகியிருக்கிறது. ஆனால், மாநில கட்சிகள் ஒருங்கிணைப்பது என்பது புதிதல்ல. முதன்முதலில் 1989-ம் ஆண்டில்தான் மாநிலக் கட்சிகள் அடங்கிய ஒரு அணி வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.

பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி என்று இப்போது சொல்லப்படுவதைப்போல, இதை மூன்றாவது அணி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அன்று காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தது. பாஜக வளர்ந்துவரும் கட்சியாக இருந்தது. எனவே இரு கட்சிகளுக்கும் மாற்றாக இந்தக் கூட்டணி உருவாகவில்லை. அன்று நாடாளுமன்றத்தில் முழு பலத்தோடு இருந்த ராஜீவ் காந்தியை வீழ்த்தவே இந்தக் கூட்டணி உருவானது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய வி.பி.சிங்கை மையப்படுத்தி இந்தக் கூட்டணிக்கு மாநிலக் கட்சிகள் அச்சாரமிட்டன.

அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராக ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) என்று பல கட்சிகள் தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், இந்தக் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து ‘ஜனதா தளம்’ என்ற பெயரில் புதிய கட்சியை வி.பி.சிங். உருவாக்கினார். காங்கிரஸை வீழ்த்த ஜனதா தளத்தோடு இடதுசாரிகள் இணைந்தன. திமுக, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் போன்ற மாநிலக் கட்சிகளும் வி.பி.சிங்கை வலுப்படுத்த கரம் கோர்த்தன. 1988-ம் ஆண்டில்‘தேசிய முன்னணி’ என்ற பெயரில் அந்தக் கூட்டணி உருவெடுத்தது.

1989-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய முன்னணி பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பாஜகவும், இடதுசாரிகளும் வெளியே இருந்த ஆதரவு அளித்தனர். வி.பி.சிங் தலைமையிலான அரசு, 11 மாதங்கள் மட்டுமே நீடித்தது. வி.பி.சிங் அரசு கவிழ்ந்த பிறகு தேசிய முன்னணியும் சிதறியது.

ஐக்கிய முன்னணி

ஆறு ஆண்டுகள் கழித்து, 1996-ல் மூன்றாவது அணி என்று நிஜமாகச் சொல்லக்கூடிய அளவுக்கு காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக ஓர் அணி உதயமானது. ஆனால், இது தேசிய முன்னணியைப்போல தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அல்ல. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு உருவான கூட்டணி. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அன்றைய தினம் பாஜக தலைமையில் செயல்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க உருவான கூட்டணி. ஜனதா தளம், திமுக, தமாகா, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்பட பல கட்சிகள் சேர்ந்து, ‘ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் செயல்பட்டன.

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டாலும், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இந்தக் கூட்டணிக்கு பலம் கிடைக்கவில்லை.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல காங்கிரஸுக்கும் ஐக்கிய முன்னணிக்கும் பொதுவான எதிரியாக இருந்த பாஜகவை வீழ்த்த ஐக்கிய முன்னணி அரசை காங்கிரஸ் வெளியே இருந்து ஆதரித்தது. சுமார் 20 மாதங்கள் மட்டுமே நீடித்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் என இரண்டு பிரதமர்கள் பதவிக்கு வந்தனர். காங்கிரஸ் நடத்திய அரசியல் சடுகுடு ஆட்டத்தில், ஆட்சி கவிழ்ந்து ஐக்கிய முன்னணி இருக்கும் இடம் தெரியாமல் போனது.

ஃபெடரல் ஃபிரண்ட்

இதன்பிறகு பாஜக, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்து ஆட்சி நடைபெற்று வந்தாலும், மூன்றாவது அணி என்பது பேச்சளவிலேயே இருந்துவருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக ‘ஃபெடரல் ஃபிரண்ட்’ என்ற பெயரில் பிராந்தியக் கட்சிகளின் கூட்டமைப்பை, அதாவது மூன்றாவது அணியை அமைப்பதற்கான யோசனையை வெளிப்படுத்தினார். இப்போது போலவே நவீன் பட்நாயக், நிதீஷ் குமார், அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால், கடைசி வரை அப்படி ஒரு கூட்டணி கட்டமைக்கப்படமலேயே போனது.

2014-ம் ஆண்டைத் தொடர்ந்து இந்த முறையும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி ‘ஃபெடரல் ஃபிரண்ட்’ பற்றி பேசி வருகிறார். அவருக்கு துணையாக தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் களமிறங்கியிருக்கிறார். பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களை சந்திரசேகர ராவ் தொடர்ச்சியாகச் சந்தித்து பேசிவருகிறார். தேர்தலுக்கு முன்பு பூதாகரமாக விவாதிக்கப்பட்டு, கலகலத்துவிடுவது மூன்றாவது அணி பற்றிய பேச்சின் வாடிக்கை. இந்த முறையாவது பேச்சுவார்த்தைகள் முழுமை பெற்று மூன்றாவது அணி உருவாகுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x