Last Updated : 10 Jun, 2024 07:36 PM

2  

Published : 10 Jun 2024 07:36 PM
Last Updated : 10 Jun 2024 07:36 PM

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்ததன் பின்னணி என்ன?

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக செயல்பட்டவரும், பிஜு ஜனதா தளத்தின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்பின் பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

ஐஏஎஸ் அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் ஈட்டியவர் வி.கே. பாண்டியன். அதன் காரணமாகவே, அவரை நவீன் பட்நாயக் தனது அலுவலக அதிகாரியாக நியமித்தார். சுமார் 12 ஆண்டு காலம் நவீன் பட்நாயக்கின் அலுவலக அதிகாரியாக திறம்பட செயல்பட்ட வி.கே.பாண்டியன், மாநிலத்தின் பல்வேறு துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அதோடு, கோவிட் பெருந்தொற்று, இரண்டு பெரும் புயல்கள் என அவர் எதிர்கொண்ட சவால்கள் மிக முக்கியமானவை.

அவற்றில் எல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டதை அடுத்தே, நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக உருவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக நவீன் பட்நாயக்குக்கு உதவும் நோக்கில் சமீபத்தில் அரசியலில் நுழைந்தார். பிஜு ஜனதா தளத்தின் முக்கிய தலைவராக மாநிலம் தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். எனினும், பிஜு ஜனதா தளத்தின் தோல்வியை அடுத்து தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பின் பின்னணி 2 பகுதிகளைக் கொண்டது. ஒன்று, தேர்தலுக்கு முன் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள். இரண்டு, தேர்தலுக்குப் பின் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள்.

தேர்தலுக்கு முன்... - மாநிலம் தழுவிய தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் வி.கே.பாண்டியன் ஈடுபட்டார். கட்சியில், நவீன் பட்நாயக்குக்கு இருக்கும் முக்கியத்துவம் அவருக்கும் கொடுக்கப்பட்டது. இது பிஜு ஜனதா தளத்தின்(பிஜேடி) அடுத்த தலைவராக குறிப்பாக, நவீன் பட்நாயக்கின் வாரிசாக அவரை அடையாளம் காட்டியது.

பாஜக இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. நவீன் பட்நாயக் அரசு மீது பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லாத நிலையில், பாஜக வி.கே.பாண்டியனை தனது தேர்தல் வெற்றிக்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி காய்களை நகர்த்தியது. பிஜேடி வெற்றி பெற்றால் வி.கே.பாண்டியன்தான் முதல்வராவார் என அவருக்கு எதிராக முதல் விமர்சனத்தை முன்வைத்தது. மண்ணின் மைந்தருக்குப் பதிலாக வேறு மாநிலத்தவர் ஒடிசாவை ஆள்வதா என பாஜக கேள்வி எழுப்பியது. இதனால், ஒடிசாவின் கலாச்சாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அது பிரச்சாரம் செய்தது.

பாஜகவின் இந்த பிரச்சாரத்துக்கு ஊடகங்கள் மூலம் வி.கே.பாண்டியன் பதில் அளித்தார். தேர்தலில் பிஜேடி வெற்றிபெறும் என்றும், மண்ணின் மைந்தரான நவீன் பட்நாயக்தான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் அவர் கூறினார். முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இல்லை என்றும் உறுதிபட தெரிவித்தார்.

அடுத்ததாக, பாஜகவைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா 2 வீடியோக்களை வெளியிட்டார். ஒன்று, நவீன் பட்நாயக்கின் கை ஆடுவதை வி.கே.பாண்டியன் மறைக்க முயலும் வீடியோ. ஒரு பொதுக் கூட்டத்தில் நின்றபடி நவீன் பட்நாயக் பேசிக் கொண்டிருக்கும்போது அவரது கை ஆடுவதை கவனித்த வி.கே.பாண்டியன் அந்த கையை உள்ளே இழுத்து வைத்தார். இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை வி.கே.பாண்டியன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும், அதனை இந்த வீடியோ உணர்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக அவர் வெளியிட்ட இரண்டாவது வீடியோ, நவீன் பட்நாயக் அமர்ந்தபடி பொதுக் கூட்டத்தில் பேசும்போது, அவரது கால்களுக்கு கீழே தனது கால்களை வி.கே.பாண்டியன் கொண்டு சென்றதைக் காட்டும் வீடியோ. இந்த வீடியோவை வெளியிட்ட ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு உள்ள மரியாதை இவ்வளவுதானா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த வீடியோக்கள் பாஜக எதிர்பார்த்ததைப் போலவே, ஒடிசா மக்களிடமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதனையடுத்து, ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிப்புக்கு பின்னணியில் சதி இருக்கலாம் என்ற சத்தேகம் எழுந்திருப்பதாகவும், எனவே ஒடிசாவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடன் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இது வி.கே. பாண்டியனுக்கு எதிரான ஒரு பெரிய அறிவிப்பாகப் பார்க்கப்பட்டது.

அடுத்ததாக, புரி ஜகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவி தொலைந்து போன விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டது. இதிலும் வி.கே.பாண்டியனை பாஜக இழுத்தது. அந்த சாவி, தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதாக பிரதமர் மோடி கூறினார். அதோடு, பாஜக ஆட்சி அமைந்ததும் பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் மோடி அறிவித்தார். இதன்மூலம் வி.கே பாண்டியன் மீண்டும் குறிவைக்கப்பட்டார்.

தேர்தல் நெருங்க, நெருங்க பாண்டியனுக்கு எதிரான இந்த விவகாரங்கள் கூர்மையடையத் தொடங்கின. அந்த வகையில், ஒடிசா மாநில தேர்தல் பாண்டியனை மையப்படுத்தியதாகவே மாறிப்போனது. இதை உணர்ந்த நவீன் பட்நாயக், பாண்டியன் தனது அரசியல் வாரிசு அல்ல என அறிவித்தார். மேலும், தனது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் கூறினார். எனினும், தேர்தல் நெருக்கத்தில் கூறிய இந்த விளக்கம் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தவறியது.

வி.கே.பாண்டியனுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக திருப்பிய பாஜக, நவீன் பட்நாயக் மீதான விமர்சனத்தை பெருமளவில் தவிர்த்துவிட்டது. நவீன் பட்நாயக்குக்கு எதிராக அது முன்வைத்த ஒரே ஒரு விமர்சனம், அவரது தலைமையில் ஒடிசாவின் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது என்பது மட்டுமே. பாஜகவின் இந்த தேர்தல் உத்தி அதற்கு கை கொடுத்ததன் காரணமாகவே, தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வெற்றியை பதிவு செய்து ஆட்சியைக் கைப்பற்றியது.

தேர்தலுக்குப் பின்... - அடுத்ததாக, தேர்தல் முடிவுகளுக்குப் பின் வி.கே.பாண்டியன் தொடர்பாக என்னென்ன நடந்தது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். கடந்த 2000 முதல் 14 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக உள்ள நவீன் பட்நாயக் முதல் முறையாக மீண்டும் முதல்வராவதற்கான வாய்ப்பை இழக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பிஜேடி 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது. மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 20-ஐ பாஜக கைப்பற்றுகிறது. ஒன்றை காங்கிரஸ் கைப்பற்றுகிறது. பிஜேடி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

தேர்தலில் தோல்வி அடைந்த பிஜேடி கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் உள்பட அந்தக் கட்சியைச் சேர்ந்த பலர், தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் என குற்றம்சாட்டத் தொடங்கினர். இது கட்சிக்குள்ளும் பாண்டியனின் பிடி தளர்வதைக் காட்டுவதாக இருந்தது. திருமணம் செய்து கொள்ளாதவரான நவீன் பட்நாயக், தனக்கு அடுத்து கட்சியின் வாரிசு யார் என்பதை தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தால் அது கட்சிக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். பாண்டியனுக்கும் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

மென்மையான போக்கு கொண்டவர் நவீன் பட்நாயக். ஆட்சி அதிகாரமும் தற்போது அவரிடம் இல்லை. இத்தகைய சூழலில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் பாஜக, மீண்டும் தன்னை குறிவைத்து பழிவாங்குமானால் அதனை தன்னால் எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி வி.கே.பாண்டியனுக்கு எழ அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, இனியும் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு போன்ற ஒரு தோற்றத்தில் தொடருவது தனது எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்காது என அவர் கருதியிருக்கக் கூடும்.

அதோடு, தேர்தலுக்கு முன்பாக வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா மீதும் பாஜக குற்றம்சாட்டியது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விவகாரத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக பாஜக குற்றம் சாட்டியது. அதாவது, அரசிடம் கடன்பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆளும் பிஜேடிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என அதிகாரத் தோரணையில் அவர் கூறி வருவதாக பாஜக குற்றம் சாட்டியது. இதனால், தானும் குறிவைக்கப்படுவதாக சுஜாதா கருதியிருக்கக்கூடும்.

இந்த பின்னணியிலேயே தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இருவரும் வெளியே சென்றுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், பாண்டியன் தலைமறைவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் பிறகு 6 மாத விடுப்பில் சுஜாதா சென்றிருப்பதாக செய்தி வெளியானது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், ஒடிசாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஏஎஸ் அதிகாரியாக சிறப்பாக செயல்ப்பட்டவர். எனினும், அரசியல் அவரை அதிரவைத்துவிட்டது. அரசு உயரதிகாரியாக இருந்து திடீர் அரசியல்வாதியாக மாறிய வி.கே.பாண்டியன், அதே வேகத்தில் தற்போது தீவிர அரசியலில் இருந்தும் விலகியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x