

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் விகே பாண்டியனின் மனைவியுமான சுஜாதா கார்த்திகேயன் பணி யிலிருந்து 6 மாத விடுப்பில் சென்றுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்துவந்த நவீன் பட்நாயக், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் மூளையாக செயல்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன், தேர்தல் தோல்விக்குப் பிறகு பொதுவெளிக்கு வரவே இல்லை.அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. டெல்லியில் அவர் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது மனைவியும் ஒடிசா மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன் 6 மாத விடுப்பில் சென்றுள்ளார்.
சுஜாதா கார்த்திகேயன் மிஷன் சக்தி துறையில் இருந்துவந்தார். அவர் பிஜு ஜனதா தளத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கடன் தரப்படமாட்டாது என்று மகளிர் சுய உதவிக் குழுக்களை மிரட்டுவதாகவும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் கடந்த மே 2-ம் தேதி சுஜாதாவை பொதுமக்கள் சாராத துறைக்கு மாற்றியது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வெழுதப் போகும் தன் மகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி 6 மாத விடுப்பில் சுஜாதா கார்த்திகேயன் சென்றுள்ளார்.