

ஆதர்ஷ் ஊழல் வழக்கு எனது வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், நான்டெட் மக்களவை தொகுதி வேட்பாளருமான அசோக் சவாண் குறிப்பிட்டார்.
ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அசோக் சவாணுக்கு மக்களவை தேர் தலில் காங்கிரஸ் வாய்ப்பு அளித்துள்ளதை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் தனது மைத்துனரிடமிருந்து அத்தொகுதியை சவாண் பறித்துக் கொண்டதாக மோடி குற்றம் சாட்டி யிருந்தார்.
இந்நிலையில் அசோக் சவாண் நிருபர்களிடம் கூறியதாவது:
மோடியின் பேச்சு எனக்கு வியப் பளிக்கிறது. நான்டெட் தொகுதியின் தற்போதைய எம்.பி.யும் எனது மைத்துனருமான பாஸ்கர் ராவ் பாட்டீல் இங்கு மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. அதனால் கட்சி என்னை நிறுத்தியுள்ளது. ஆட்சியில் இருப்பதனால் ஏற்படும் அதிருப்தி காரணமாக கட்சி இம்முடிவை எடுத்துள்ளது.
சகோதரியின் உரிமையை யாராவது பறித்துக்கொள்வார் களா? எனது மைத்துனர், சகோதரி, மனைவி என குடும்பத்தினர் அனைவரும் எனக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடிக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் யார் பிரச்சாரம் செய்கிறார்கள்?
ஆதர்ஷ் வழக்கில் எனக்கு எதிராக ஊடகங்கள் வேண்டு மென்றே மிகைப்படுத்தி காட்டுகின்றன. இந்த ஊழல் புகார் தொடர்பான நீதிபதி ஜே.ஏ.பாட்டீல் கமிஷன் தனது அறிக்கையில் “குடியிருப்புகள் கட்டப்பட்ட நிலம் மாநில அரசுக்கு சொந்தமானது, மத்திய அரசுக்கு அல்ல” என்று கூறியுள்ளது. இந்த வழக்கு பற்றி பேசுவதன் மூலம் எதிர்க்கட்சிகள் லாபம் அடைய முடியாது. இது எனது வெற்றி வாய்ப்பையும் பாதிக்காது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் சவப்பெட்டி ஊழல் நடைபெற்றதே. அது மிகப்பெரிய ஊழல் இல்லையா?
மகாராஷ்டிரத்தில் மோடி அலை வீசுவதாக எனக்குத் தோன்ற வில்லை.” என்றார் அசோக் சவாண்.