Last Updated : 08 Jun, 2024 05:23 PM

 

Published : 08 Jun 2024 05:23 PM
Last Updated : 08 Jun 2024 05:23 PM

மாயாவதிக்கு மாற்றாக சந்திரசேகர் ஆசாத்? - உ.பி-யில் சுயேச்சையாக வென்ற தலித் தலைவரின் பின்புலம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவி மாயாவதிக்கு மாற்றாக சந்திரசேகர் ஆசாத் (37) உருவாகி வருவதாகத் தெரிகிறது. நகீனா தொகுதியில் இந்த தலித் தலைவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் ஒரே ஒரு வேட்பாளர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர், பீம் ஆர்மி எனும் அமைப்பை துவக்கி நடத்தும் ராவண் என்கிற சந்திரசேகர் ஆசாத். 2020ல் 'ஆசாத் சமாஜ் கட்சி(கன்ஷிராம்)' எனும் பெயரில் கட்சியையும் துவங்கிய சந்திரசேகர் ஆசாத், உத்தரப் பிரதேசத்தின் தனித்தொகுதியான நகீனாவில் போட்டியிட்டார். இவருக்கு 1,51,473 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இங்கு பாஜக இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. மூன்றாவதாக சமாஜ்வாதியும், பிஎஸ்பி நான்காம் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 1989 மக்களவை தேர்தலில் மாயாவதி நகீனாவில் போட்டியிட்டார். நகீனாவில் கிடைத்த வெற்றியால் மாயாவதி முதன்முறையாக மக்களவை எம்பியானார். பிறகு சமாஜ்வாதியின் கூட்டணியுடன் நகீனாவில் பிஎஸ்பி 2019 தேர்தலில் போட்டியிட்டது. இதில் வெற்றிபெற்ற பிஎஸ்பி, தற்போது நடந்த முடிந்த இந்த தேர்தலில் வெறும் 13,272 வாக்குகளை பெற்றுள்ளது. மோடி அலையால், 2014 இல் நகீனாவில் பாஜக வெற்றி பெற்றது.

நகீனாவிலுள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்கள் இணைந்து சந்திரசேகர் ஆசாத்தை வெற்றிபெறச் செய்துள்ளனர். இங்கு 21 சதவிகித எஸ்சி, சுமார் 6 லட்சம் முஸ்லிம்கள், ஒரு லட்சம் எஸ்டிக்களும் உள்ளனர். நகீனா வெற்றிக்கு பிறகு சந்திரசேகர் ஆசாத், உ.பி-யின் தலித் தலைவராக வளரத் துவங்கியுள்ளார். "தலித்துகளை மாயாவதி காக்கத் தவறிவிட்டார். அவரின் தவறான நடவடிக்கையால் தனது சமூகம் பாதிக்கப்பட்டு வருகிறது" என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் பெரும்பாலும் பிஎஸ்பி தலைவர் மாயாவதியை விமர்சித்திருந்தார் சந்திசேகர் ஆசாத்.

உத்தரப் பிரதேசத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த மாயாவதியை விஞ்சும் வகையில் சந்திரசேகர் ஆசாத் பேச்சுக்கள் அமைந்து வருகிறது. மேலும், உபியில் உள்ள தலித், ஒபிசி மற்றும் முஸ்லிம்களை ஒன்றிணைத்து பாஜகவை எதிர்ப்பது தான் தனது குறிக்கோள் என்கிறார். இவர்களுடன் தம்மை ஆதரித்த விவசாயிகளின் பிரச்சினைகளுக்காகவும் போராட இருப்பதாக சந்திரசேகர் ஆசாத் தேர்தலில் வாக்குறுதி அளித்தார்.

உபியின் சஹரான்பூரிலுள்ள சுட்மால்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் ஆசாத். இவரது தந்தையான கோவர்தன் தாஸ், ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர். சட்டக்கல்வியில் பட்டம் பெற்ற ஆசாத், 2014ல் தம் நண்பர்களுடன் இணைந்து பீம் ஆர்மி எனும் தலித் நல இயக்கத்தை துவக்கினார். 2017ல் பீம் ஆர்மி சார்பில் சஹரான்பூரில், ஆசாத் நடத்திய ஊர்வலத்தில் தலித் மற்றும் தாக்குர் சமூகத்தினர் இடையே மோதலானது இதில் உருவானக் கலவரம் காரணமாக ஆசாத், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் கைது செய்யப்பட்டார். தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

அப்போது முதல் உபியில் ஆசாத் பிரபலமாகத் துவங்கினார். 2018ல் அவர் மீதான பாதுகாப்பு சட்டம் விலக்கப்பட்டது. பிறகு அவர் 2020ல் தனியாக அரசியல் கட்சியும் துவக்கி தேர்தலில் போட்டியிடத் துவங்கினார். இதனிடையே, உபியில் ஆசாத் மீது ஒரு அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியது. மீரட் மருத்துவமனையில் இருந்தவரை காண காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வந்திருந்தார். இதனால், உபி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் ஆசாத் கூட்டணி என்ற பேச்சு எழுந்தது. பிறகு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங்குடனும் ஆசாத் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2019ல் பிரதமர் நரேந்திர மோடியை வாரணாசியில் எதிர்த்து போட்டியிடுவதாக ஆசாத் அறிவித்தார். பிறகு இந்த முடிவை கைவிட்டவர், 2022 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட்டார். தற்போது தலித் ஆதரவுக் கட்சியான பிஎஸ்பிக்கு மக்களவையில் ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், தலித்துக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் வாய்ப்பு ஆசாத்துக்கு கிடைத்துள்ளது.

இதன்மூலம், ஆசாத் உபியில் மாயாவதிக்கு மாற்றாக எழுச்சிபெறும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆசாத்தால் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உ.பி.யில் மேலும் வலுவிழக்கும் நேரிடும் அபாயமும் நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x